Saturday, August 23, 2008

மடங்கள் மடத்தனத்தின் கூடாரங்கள்

ஆன்மீகம் என்ற போர்வையில் சாதி, மத, இன, மொழியை முன்னிறுத்தி நடத்தப்படும் அனைத்து மடங்களும் மடத்தனங்களின் கூடாரம்.

அன்பின் வழியது உயிர்நிலை அ திலார்
என்பு தோல் போர்த்திய உடம்பு

உலகில் இன்று நிலவும் கோரப்பிண்ணனிக்கு காரணம் எது என அறிய முயற்சித்தால் ஒவ்வொருக்குள்ளும் உள்ள ஒப்பற்ற தன் உயிர் நிலையை நேசித்து ஆராதிக்கும் பண்பைப் பெறாதாதுதான் என்பது என் கருத்து.

சரீர சிந்தனையின் உந்துதலால் அதன் சுகத்திற்கான பாட்டில் உயிர் நிலையை உணராமல் அதை அழித்துக் கொள்ளும் வாழ்வியல் சிந்தாந்தங்களை அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொண்டு விட்டோம். அனைவரும் சரீர சிந்தனையின் வசப்பட்டதால் உலகமே சுயநலக் கூட்டத்தின் கூடாரமாகி விட்டது. சரீர சிந்தனை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தால் கட்டப்பட்டது.

வினையறுத்தல் என்ற பொதுவான கருத்தை முன்னிறுத்திதான் அனைத்து மதப் பெரியோர்களும் தங்கள் கால தேச சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்கள் அறிவுரையை வழங்கி வந்துள்ளனர். ஆனால் இன்றைய மடங்கள் , அமைப்புக்கள், இயக்கங்கள் அறியாமையினால் பெரியோர்கள் வகுத்துவைத்த பாதைக்கு தங்களின் கீழான சுய நல அறிவு கொண்டு தவறான செயல்பாட்டு வினையால் இப்பூமியை இரத்தக் களறியாக்கி விட்டிருக்கின்றனர்.

முதலில் தன் தேகத்தை நேசிக்கும் அறிவை விடுத்து அதனுள் ஒளிரும் தன் உயிரை நேசிக்கும் அறிவைப் பெறும் பொழுது அன்பின் மற்றொரு நிலையாகிய அனைத்துயிரும் ஒன்றே என்ற சிந்தனை பூத்துக் குலுங்கும். இன்றைய மனித குலம் தன்னலத்தின் பாதையில் தன் உயிரையும் பிற உயிரையும் நேசிப்பதை வி்டுத்து தன் தேகத்தை மட்டும் நேசிக்கும் வழியினைப் பற்றியிருப்பதால்தான் உலகம் இன்று வன்மத்தின் பாதையை உகந்து கொண்டுள்ளது.

தேக சித்தாந்தம் மாயை. உயிரின் வழி உணரும்போது ஞானம் கைகூடுகிறது. தேகம் என்பது ஒரு குறுகிய வட்டம். ஆனால் தேகத்தில் பூத்துக் குலுங்கும் உயிர் நிலை பிரபஞ்ச சக்தியின் இதை மற்றொரு பரிணாம ரூபம்.

வினையறுத்தல் என்பது ஞானத்தின் முதற்படி. தேக சிந்தனை வசப்பட்டுச் செய்யும் எச்செயலும் வினைபுரிதலுக்கு வழிவகுக்குகிறது. உலக வினைகளின் பலன் பாவம் அல்லது மரணம். உயிர்வினை ஞானத்தின் திறவுகோல். அழியாநிலை. உயிர்வினை ஆற்றும் உபாயத்தைப் போதிக்க வந்தவர்கள்தான் மத கர்த்தர்கள். ஆனால் அவர்கள் அமைத்து வைத்த மத சிந்தனைகள் குரூர மனம் கொண்ட தேக சிந்தனையில் உள்ள அறியா மக்களால் இன்று கூறு போடப்பட்டிருப்பது வேதனையைத் தரும் ஒரு விஷயம்.

தேக சிந்தனை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலக் குறும்பால் பேதப்பட்டு வினைபுரியும். இதனை மாற்றும் உபாயம் அனைத்தும் அனைத்து வேதங்களிலும் பொதுவாக ஒத்து இருப்பது ஒரு ஆச்சரியமான ஒன்று. தன் உயிர்நிலை அறிந்தவர்கள்தான் அவதார மகிமையுடையவர்கள். அவர்கள் வினை இப்பூமியில் மக்களிடம் புதைந்துள்ள அறிவின் மகிமையையும், அதன் நீண்ட பரிமாணத்தையும் உணரவைப்பது என்ற ஒன்றைத்தவிர வேறெதையும் செய்யவில்லை.

புனிதர் இயேசு தங்கள் குறுகிய கால வாழ்வினுக்குள் அனைத்து மக்களிடமும் அன்பைப் போதித்த அற்புதங்களை நிகழ்த்தினார்.

முகம்மது ஸல் அவ்ர்கள் 40 ஆண்டுகாலம் அறியாமை நிறைந்த முரட்டு சுபாவம் உள்ள மக்களை குறிவைத்து வாழ்ந்த தியாக வாழ்வு அறிவின் உயர்நிலைக்கு எடுத்துக் காட்டு.

அதர்மத்தைக் களைய பகவான் கிருஷ்ணனின் அறிவு ஆச்சரியக் களஞ்சியம்.

இவ்வாறாக அறியாமையைக் களைவதையே தங்கள் வினைபுரிதலாகக் கொண்ட பெரியோர்கள் அவர்கள் எடுத்துக் கொண்ட பெருமுயற்சிகள் தியாக வரலாற்றின் அன்பின் அடையாளங்கள்.இருப்பினும் இந்த வழிகளைப் புறக்கணித்து அறியாமையை வளர்த்ததில் பெரும் பங்கு மதம் சார்ந்த மடங்களுக்கும், அமைப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் பொருந்தும்.

உதாரணமாக கடவுள் என்ற தத்துவப் பொருள் இருக்கும் இடம், அனைத்து மத வேதங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டிருந்தாலும் மதப் பிண்ணணி கொண்ட மடங்கள் இதற்கு மாற்றுக் கருத்தைத்தான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறது.

சைவமதம் ஈசன் இருப்பிடம் இருதயம் என்றும்

வைணவம் இருதய கமலவாசன் என்றும்

கிருத்துவம் புனித இருதயம் என்றும்

இஸ்லாம் கல்பென்ற இருதயத்தில் அல்லா உள்ளான் என்றும்
ஒத்த கருத்துக் கொண்டிருந்தாலும் வேதத்தில் பயிற்சியும் பாண்டித்யமும் பெற்ற இன்றைய ஆன்மீக சிந்தனாவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் நடத்தையாகிய பிற மத சகிப்புத்தன்மை இல்லாத ஒன்றினால் வெளிப்படுகிறது.

காரணம் இங்கே இருதயம் என்ற ஒரு சொல்லுக்கு பொருள் அறியா காரணத்தால் அறிவில் பேதமாகி அது தேகத்தில்முடிவடைகிறது. உயிர்நிலை என்ற உயர்ந்த ஞானம் வேதத்தை வார்த்தையாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு புரியாத அறியாமையால் இது நிகழ்கிறது. இருதய இடத்தை அறியும் வினையே மனிதகுலம் ஆற்றவேண்டிய பணியாகும்.

கடவுள் நிலையாகிய உயிர்நிலையை கல்லிலும் மண்ணிலும் தேடியதன் விளைவு மனித இனம் இன்று மிருக நிலையிலிருந்து சிறிதும் மாறாதிருக்கிறது. ஆனால் கீழ்நிலை மிருகங்கள் மனிதனைவிட தன் சுற்றம் சார்ந்து ஆனந்தமான வாழ்வு வாழ்கிறது.

ஆறாம் அறிவின் பயனை அறியாமல் தேகத்தைவிட்டு உயிர்நிலை வேறொரு அறிவு தேகத்தை நாடி தூல உடலைத் துறக்கிறது. இது வினையின் பயன். நம் வினைக்குள் மாட்டும் பாவச்செயலை போக்கவந்தவர்கள்தான் அவதார புருஷர்கள். அவர்கள் தங்களுக்கென்று எந்த மட அமைப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணமாக திருவள்ளுவ நாயனார் அவர்கள் கூறும் ஒரு செய்யுளைப் பாருங்கள்

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும்
காப்பான்வரம் என்னும் வைப்பிற்கு ஓர் வி்த்து

நம்முடைய ஐந்து புலன்களால் ஆற்றும் வினைகளால் ஏற்படும் விளைவுகளைக் கண்காணிக்க ஒரு ஆசான் துணை வேண்டும். அந்த ஆசான் அறிவுசால் பெரியோராக இருக்க வேண்டும். அவர் வழி செல்லும்போது தேக சிந்தனையில் இருக்கும் மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் புலன்கள் கர்மேந்தியங்கள் என்ற நிலை மாறி ஞானேந்திரியங்கள் என்ற பொறிகளாக மாறுகிறது. இதற்கு மங்காத வாய்மையென்னும் தவச் செல்லம் வேண்டும் என்று ஒவ்வொரு குறளிலும் தன் தெய்வக் கொரலை வைத்து திருவள்ளுவ நாயனார் வழியிட்டுச் சென்றுள்ளார்.

புலன்வழிப் பற்றியோடிப் போக்கியயென்
வயதையெல்லாம் நலன்தர மீட்டித்
தந்தென் நாளினை அடியேன் மீண்டும்
புலன்வழி யழித்திடாது
புண்ணியம் தனக்கே யீட்டென்றலர்ந்த
வாய்த் திகிரி வேந்தே அதிசியம் ஆஈ தென்னே

புலன்வழிப் பற்றியோடி அழித்துக் கொண்ட வயதை நமக்கு மீட்டுத் தரும் வினைத் தொழிலைச் செய்யவந்தவர்களே மேலோர். அன்பின் பாதையை அனைவரும் அறிய வேண்டுமெனில் அனைவரும் தன் தேக சிந்தனைப் பாடுகளைத் தூக்கியெறிந்து உலகெங்கும் விளங்கும் உயிர்நிலையை தன்னுள்ளில் தேடும் வினைபுரியவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்பது இதைத்தான். இதற்கான பாட்டிற்கு நாம் பெறும் கூலி உலக அன்பு, பிரபஞ்ச ஆனந்தம், நேசக் கட்டுடலால் இணைக்கப்பட்ட உறவு அமைப்புகள். இதுவே ராம ராஜ்யம். தேஜோமயம். பிரம்மானந்தம் போன்ற அனைத்தும்

இதைக் காணும் மக்களுக்கு ஒரு செய்தி. இது நாள் வரை நீங்கள் திருக்குரலை பல பரிமாணங்களில் கண்டும் கேட்டும் படித்தும் இன்புற்றிருப்பீர்கள். இன்றிலிருந்து ஒவ்வொரு குரளையும் அதன் செய்தியை உலக விஷயங்களுக்கோ அல்லது வாழ்வியலுக்கோ கூறுவதாகப் பொருள் கொள்ளாமல் அதாவது நமது தேகத்தைச் சார்ந்த செய்தியாகக் கருதாமல் நுண்ணிய அறிவோடு படித்துப் பாருங்கள். பெரிய பெரிய ஆன்மீகப் பொக்கிஷங்களை உள்ளடக்கியிருப்பதை அறியமுடியும்.

இந்தக் குறளைப் பாருங்கள்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்
நல்வினைமேற்சென்று செய்யப்படும்

இங்கே நல்வினை என்பதை உலக மக்களுக்கு செய்யும் உதவிகள் அல்லது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவிக்கான காரியங்கள் என்ற சிந்தனைவிடுத்து அவர் கூறும் மேற்சென்று செய்யப்படும் என்ற வினை எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள். அதாவது ஒரு மூச்சு உள்ளே இழுக்கும்போது நாம் செல்வம் படைத்தவனாகின்றோம். அதே ஒரு மூச்சினை வெளியே விடும்போது ஏழையாகிறோம் என்ற ஒரு தகவலை முன்னிறுத்திப் பாருங்கள். கல்வியின் பயன் என்ன வென்று அறியலாம்

ஈதல் இசைபட வாழ்தல் அஃது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

என்பதில் நாம் சம்பாதிக்க வேண்டிய ஊதியம் என்ன வென்று அறியலாம்

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்
வையத்து அலகையா வைக்கப்படும்

இங்கே அலகை என்ற சொல் ஊதியம் என்ற பயனுக்கு எதிரான பலன் என்பது அறியலாம். ஜலத்தினில் அக்கினி உருவாய் இருப்பது உயிர் அது ஜடத்தினுக்கு இறங்கும்போது தேகமாகிறது. தேகத்தை துறக்கும்போது ஆசாபாசங்கள் ஓய்கிறது. அனைத்துயிரும் ஒன்றென அறியும் பேரறிவு உதயமாகிறது. தேக அறிவில் இறங்கும் போது வியாதிகள் பீடிக்கிறது. தேவஅறிவு உயிரை வாழவைக்கிறது. இந்த ஒப்பற்ற உண்மைகளை மடங்கள் அறியவில்லை. அறிந்து கொள்ள முயலவும் இல்லை. தீவிரவாதமும், கேடும் பிடியாய்க் கொண்டு தன் மதத்திற்கே விரோதமான காரியங்களைத்தான் எல்லா மடங்களும் இன்று பற்றிக் கொண்டு உள்ளது.உயிர்நிலையை அறிய மறுக்கும் அறியாமையைக் களைந்து ஆற்ற வேண்டிய வினை எது என்பதை உணர்த்தும் ஒரு பாடலைக் காண்போம்.

உள்ளது நூறே யாண்டி லிளமையி
லீராறு போகும் மெள்ளவே
முதுமை தன்னில் மூன்றுபத்தாகும் மைந்தா
கள்ளமா முறக்கந் தன்னில்
கணக்கிருபத்தாறு போக
விள்ளுவா யிருபத்தாறே
மீந்ததிலுரைக்கக் கேண்மோ

மீந்ததோர் வயதிருபத் தாறுக்கும்
பங்குக்காரர்
காய்ந்திடும் வறுமை நோயும்
கல்வியு மின்ப மின்னோர்க்கீந்திடில்
மீதமெங்கே இவர்கட்கே போதா தாகும்
மீந்துனக் கெவரீ வார்காண்
மோட்சமுன் பேச்சே வீணாம்

வீணதுவாகிடாமல் மேலவ ரிடத்தில்
சார்ந்தாலூண்சுவை யிருதயத்துள்
ளுறைந்த நன்னிலமும் காட்டிப்
போனனாள் மீண்டங்கேறும்
பேரின்ப வடிவம் பெற்று
ஊனங்க ளனைத்தும் தேய்ந்து
உன்புகழ் வானம் பாயும்

இந்த வினையை எந்த மடங்கள் முன்னிறுத்துகிறதோ அன்றே அன்பிற்கான பாதை செம்மைப்படுத்தவிட்டது என்று பொருள்

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பணி யெவர்க்கும் ஆற்றி
மனத்துள்ளே பேதா பேதம்
வஞ்சம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறென்றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும்தானே

பஞ்சமா பாதங்கள் அல்லது அதன் வினைப்பயனை மட்டும் செய்யும் நம் உடலில் உள்ள கர்மேந்திரியங்களை பஞ்சாட்சரப் பொருளை அறியும் ஞானேந்திரியமாகக் கொள்ளும் போதுதான் உலகம் அன்பின் பூங்காவாகும். அந்த நாளை பூமிக்கு இறக்க இன்னொரு இயேசுவோ அல்லது கிருஷ்ணரோ வர அனைவரும் இறைவனை இறைஞ்சுவோம்.

எனவே கருத்துக்களே கடவுள். கடவுளைக் கல்லிலும் மண்ணிலும் தேடாதிருப்போம்.

Saturday, April 12, 2008

எண்ணங்களும் மின்சாரமும்

இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான மின்சாரம் நாகரீக வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த மின்சக்திக்கும் இணையானது நமது எண்ண அலைகள் என்பதை தற்போதைய விஞ்ஞர்ன ஆராயச்சி பெரும் ஆய்வுகள் மூலம் கண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞானம் இன்று சொல்லும் செய்தியை மெய்ஞானம் என்றோ சொல்லியிருக்கிறது. எண்ணங்களின் வலிமை ஒரு அணுவின் ஆற்றலையும் விஞ்ஞக்கூடியது. இது தொடர்பான ஒரு பழந்தமிழ்ப் பாடலைப் பாருங்கள். இது எம்பெருமான் பிரம்மப் பிரகாச பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் பேரிரக்கப் பிரவாகங்களில் ஒரு துளி.


எண்ணம் பல கோடியதாய் விரிந்தே
மன்னும் பல உயிர்களெலாம் நமவாய்
வின்னம் பல கோடி துயரறுநாள்
பொன்னம்பல மிங்கெணதிர்த்ததுவே

பரவிப் பிரியும் எண்ணங்கள் விரிந்து படுமானால் அதன் அடர் சக்தி குறைந்து உயிர்களை எமனுக்கு இரையாக்கும், அதே எண்ணங்களின் வலிமையை குவித்துப் பெருக்குவோமானால் வின்னங்களாகிய துன்பங்கள் விலகி விலை மதிக்கமுடியாத பொன்னம்பல உயிர் வெளிச்சத்தை எதிர்ப்படக் காணலாம்.

மின்சாரப் பண்பின் பல பயன்பாடுகளில் ஒன்றான பல்புகளின் மூலம் இருள் நீக்கும் வெளிச்சம் பெறப்பயன்படுவது ஒரு சிறு முயற்சிதான். ஆனால் மின்சாரத்தின் அதி முக்கியப் பண்பு அதன் அடர்நிலை வெப்பம்தான். இந்த வெப்பம் நமது உடலிலும் ரஷிக்கும் அக்னி மற்றும் பட்சிக்கும் அதாவது அழிக்கும் அக்னி மயமாக உள்ளது. இது எண்ண அலைகளால் வெளிச்சமடைவதற்கும் அல்லது உடலையே எரித்துவிடும் உயர் வெப்பநிலைக்கும் இட்டுச் செல்லும் முக்கிய காரணியும் ஆகும். எண்ணமும் சுவாசமும் ஒன்றுக்கொன்று பெரும்பங்கு வகித்து எண்ண அலைகளால் சுவாசம் வசமாகும் வாசி யோகத்தின் பெருமையால் உடலை உன்னதமாக்கிக் கொள்ளலாம்.

இதில் மரணத்தை வெல்லும் உபாயமும் சித்தர்கள் தந்திருக்கிறார்கள்.


இங்கு மனித உயிர் ஆற்றலானது மின்சக்திக்கு ஒப்பான கண்ணிற்குப் புலப்படாத ஒரு உயர்சக்தியாகும் இதைத்தான் வள்ளுவம் உறங்குவதுபோல் சாக்காடு என்று கூறுகிறார். எண்ணங்கள் ஒடுங்கும்போது சுவாசம் ஒடுங்குகிறது. எட்டு அங்குல சுவாசத்தை 6 அங்குலமாக வெளிவிட்டு பின் 4 ஆக மாற்றி இன்னும் உயர்நிலை யோகத்தில் மூக்கிற்குள்ளேயே சுவாசித்து வாழ்வாங்கு வாழவ்துவே மரணமிலாப் பெருவாழ்வு. மரணத்தை நம் கைவசப்படுத்தும் அறிவு மனிதனுக்கு மட்டும்தான் தரப்பட்டிருக்கிறது.

நம் மொழி மூச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு தெய்வீக்த்தன்மை வாய்ந்தது என்பது அனுபவித்தால் தெரியும்.வல்லின மெல்லின அமைப்பே நமது மொழிக்கு ஒரு தெய்வீகத்தை ஊட்டியிருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக எந்த மொழியாளரும் தனது தாய்மொழி தவிர்த்து வேறு பாஷையை அதன் அடிப்படைத் தன்மையிலேயே சுலபமாகப் பேசிவிடுவர். ஆனால் தமிழ்மொழியை மட்டும் அவ்வாறு இலகுவாகக் கைக் கொள்ள முடியாது. தமிழைத் தாய்மொழியாக அறிந்து கொண்டவர்களுக்குத்தான் இயல்பான முறையில் அதன் அழகை அனுபவித்து உணர்ந்து பேச முடியும், ஆனால் தமிழறிந்த ஒருவரால் எந்த ஒரு பாஷையையும் அந்த தேசத்து தாய்மொழி உணர்வோடு உச்சரிப்பதை இலகுவாக கைக்கொள்ளமுடியும்.

எடுத்துக் காட்டாக "சந்தம்" என்பதை நாம் சரியான முறையில் உச்சரிப்போம். இதையே தமிழ் கற்றுக் கொண்ட வேற்று மொழிக்காரர்கள் உபயோகித்தால் சந்+தம் தம் என்பதை கொஞ்சம் நன்கு பரிச்சியமாகும்வரை அழுத்தம் கொடுத்துதான் சொல்லமுடியும். இதையே சுவாசத்துடன் இணைத்து சந்நம் என்று பிரயோகித்தமானால் யாவரும் ஒலியின் நயத்தைக் குறைக்காமல் சொல்லமுடியும். இதேபோல் பங்கம் என்பதை பங்ஙம் என்று எழுதிவைத்துக் கொண்டால்தான் சரியாகச் சொல்லமுடியும். தங்கம் என்பது தங்ஙம் எனவும் பந்தம் என்பது பந்நம் எனவும் இதுபோல் 24 அட்சரங்கள் தமிழில் இன்னும் கையாளப்படாமல் மறைபொருளாகவே இருக்கிறது. வழக்குத் தமிழில் இது மறைக்கப்பட்டாலும் நாம் இன்னும் நம்மொழியை சிதைக்காமலே கையாண்டு வருகிறோம். இது அதிசயம்தானே.அகர. உகர, சிகர அமைப்புக்கள் அனைத்தும் மெய்யோடு உயிரையும், உயிரோடு மெய்யையும் இணைத்தே நம் மொழி கையாளப்பட்டு வந்திருக்கிறது. பொய்யான இவ்வுடலை மெய்யென்று சொன்னது இதைவைத்துத்தான்.

எண்ணத்தை வசப்படுத்தும் வாழ்வியலை நமக்குத் தந்ததுதான் நம் மொழியின் சிறப்பு. உகார எழுத்துவடிவம் பிள்ளையார் சுழியாகவும், ஓங்காரப் பொருள் மற்றும் எழுவகை சப்த ஸ்வரங்கள் ஆக அனைத்துமே அட்சரத்தில் மறைந்து இருக்கிறது, எண்ணத்தை ஒடுக்கும் உயர்வரிசைப் பரிபாஷைச் சொற்களைக் கொண்ட நம்மொழியில் விஞ்ஞானப் பார்வையில் ஒப்புவமை ஆய்வுக்கு கொண்ட மின்சாரம் என்பதை நமது பெரியோர்கள் உயிர் ஆற்றலாக கொண்டுள்ளார்கள், அதாவது உயிரும் மெய்யும் மொழியில் உள்ளது. அகத்துள் தேடினால் இன்னும் அதிகம் பெறலாம்,

அன்னைத் தமிழ்

மறைபொருளாய் நின்ற
மாதவத்து மாதரசி
தன்மனமொப்ப நிற்பவர்க்கு
முழுயவனம் காட்டுவாள்
தாழ்மையோடு அவள் முகத்தைக்
காட்டுமாறு கேட்டுனின்றால்
அங்கத்தின் ஒரு பகுதி
அவர்தம் தரம் அறிந்து
அன்னையவள் தன்னழகை
அளவோடு வெளியிடுவாள்
ஒருவர்க்கு திருப்பாதமும்
உரத்து அழுவோர்க்கு
உதவிடும் திருக்கரமும்
முப்பாலாம் தமிழ்ப்பால் வேண்டி
தாகத்தோடு இருப்போர்க்கு
தன் அங்கம் முழுவதும்
அன்புடனே அன்னைஅவள்
அமுதசுரபியாய் அள்ளி வழங்குவாள்

Monday, April 7, 2008

இயேசு மீண்டும் வருவார்

ஒப்பற்ற உலக மகாத்மாக்கள் உலா வரும்போது உதாசீனம்தான் அவர்கள் கண்டது. ஏனெனில் மனத்தின் மாசுகளால் நாம் எதிர்பார்க்கும், கற்பனை செய்து வைத்திருக்கும் கதாபாத்திரத் தோற்றத்தில் மகான்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. நம் எண்ணத்தில் வடித்து வைத்த கற்பனையான உருவங்களைக் கண்டாலும் நாம் அவர்களை ஏற்கப் போவதில்லை. அறிவின் முழு முயற்சியே நம்மைச் சுற்றியுள்ள நன்மையை அறிந்து கொள்வதுதானே. நம்மிடமே உலாவி இருக்கும் பெரியோர்களை நாம் எப்போதும் அறிந்து கொள்வதில்லை. அவர்கள் மறைவுக்குப் பின்தான் போற்றிப் புகழுகிறோம். இதுவும் ஒரு அறியாமையே,உதாரணமாக ஒரு குளத்தில் உள்ள தாமரைக்கு அதிகச் சொந்தம் அதில் அதனோடு வாழும் மீன்களும் தவளைகளுமே. ஓடி விளையாடி தாமரை பூத்ததிலிருந்து அதிக நெருக்கத்துடன் உள்ள இந்த ஜீவன்களுக்கு தாமரையின் உள்ளே இருக்கும் தேனின் சுவை தெரியாது. காலமெல்லாம் அதனோடு புரண்டு புழங்கி இருந்தாலும் அறிந்து கொள்ளாத அந்த ஜீவனக்ள் அறியாமையின் அடையாளங்கள். ஆனால் தாமரை முதிர்ந்து பூத்துக் குலுங்கி Divine Nector ஆகிய தேனை சூலில் சுமந்து இருக்கும் குணம் கண்டு எங்கோ பிறந்து வளர்ந்த தேனிக்கள் தான் அதைப் பெறுவதற்கு தகுதியாகிறது. என்னதான் தவளையும், மீனும் தாமரைக்கு சொந்தம் கொண்டாடினாலும் முடிவு பலனான தேன் என்னவோ அறிவுடைய தேனீக்களுக்குத்தான்.நுண்ணிய நுண்ணறிவு கொண்டு நோக்கும்கால் நம்மிடையே புழக்கத்திலிருக்கும் பெரியோர்களை அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் தேனின் சுவையை பெறத் தகுதியுடையோர்கள்தான் உண்மையான அறிவாளிகள். மற்ற உலகப் படிப்பாலும், பொருளாதாய வெற்றியாலும் அறிஞர்களை உதாசீனப்படுத்துபவர்கள் தவளைக்கும் மீனுக்கும் ஒப்பானவர்களே. உதாரணமாக கிருஷ்ண பரமாத்மாவே நேரில் குண்டத்தோடும் மயில் இறகு வைத்த கிரீடத்தோடும், கையில் குழலோடும் இன்று நேரில் வந்தால் நிச்சயம் நகைப்புக்கும் கேலிக்கும் ஆளாகி வெருண்டு அவரை அதிகமாக கோவில்களில் தேடும் ஹிந்துப் பெருமக்களால் ஓடவைக்கப்படுவார். இயேசுநாதர் இன்று வந்தால் அவரிடம் அற்புதங்களை எதிர் பார்த்து சொந்தம் கொண்டாடும் அனைத்து மக்களாலும் சாத்தியமே அற்ற செயல் படுத்தமுடியாத அதிசயங்களை எதிர்பார்த்து அவரைப் புறக்கணிப்பார்கள். ஆனால் இயேசு பிரான் தனது இரண்டாம் வருகையை உலகத்திற்கு அறிவித்து இருக்கிறார். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற வேத வசனம் நிறைவேற வேண்டுமானால், அவரிடம் அதிசயங்களை எதிர்பார்ப்பதை விட்டு அன்று காட்டிய அந்த மனித நேயமும் அன்பையும் நம்மிடையே தேடினால் அவர் நிச்சியம் கண்ணில் படுவார். ஏனெனில் அவர் மரணிப்பதுமில்லை மறைவதும் இல்லை. நித்திய ஜீவனான அறிவாகரப் புதையலிலே அவர் என்றும் மறைந்து வாழ்வளித்துக் கொண்டிருக்கிறார்.கிருஷ்ணன் என்பதும் கிருஸ்து என்பதும் ஒரு ஒப்பற்ற உயிர் ஆற்றல்.மனத்துக்கண் மாசற்ற ஒரு நிலையை உருவகமாக்கப் பெற்ற ஒரு குணத்தின் பிரதிபலிப்பு. அக் குணங்கள் வாய்க்கப் பெற்றால் நாமே ஒரு கிருஷ்ணன்தானே, கிறிஸ்துதானே. கிருஷ்ணனாக அரிதாரம் மட்டும் பூசாமல் அவர்களுடைய ஒப்பற்ற குணங்களைக் கைக் கொள்ளும்போது மனிதனே இறைவனாகிறான்.அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்நாம் பிறந்தபோது குற்றம் குறையற்ற இறைநிலையுடன் கூடிய அறமாகத்தானே பிறந்தோம். அறம் என்ற பொருளோடு பிறந்த நாம் வயது ஏற ஏற மறச் செயல்களால் அறம் மறைய குணம் கெட்ட குடிமக்களானோம். அறம் என்ற போர்வையில் எந்த தான தர்மங்களும் தேவையில்லை. நம்மிடம் உள்ள மறம் என்ற தீமைகளை என்னஎன்ன என்று அறிந்து அதை நீக்கிக் கொண்டாலே பிறந்த போது இருந்த அறமாகவே மரிக்கும்போதும் இருப்போம். அவ்வாறு குற்றங்களை நீக்கிக் கொண்டவர்களே கிருஷ்ணனும், கிருஸ்துவும் மற்றும் எண்ணற்ற உலகில் தோன்றிய உத்தம உருவங்கள்.மறத்தை அறிந்து நீக்கிக் கொள்ளும் உபாயமே அறம் எனப்படுவது. அதற்கு முதலில் மனத்துக் கண் மாசிலன் ஆதல் என்ற நிலையை அடைதலே அனைத்து அறனுமாகும்.அப்படிப்பட்ட அவதார புருஷர்கள் நிச்சயம் நாம் கற்பனையாகப் பார்க்கும் உருவத்தில் உலா வரமாட்டார்கள்.புனிதர் இயேசுவை நம்மிடையே தேடுவோம்,

Sunday, March 2, 2008

வள்ளுவம் கூறும் ஒழுக்கம்

வாழ்வியலில் செம்மையான வாழ்க்கை முறைக்கு வள்ளுவம் கூறாத வழிமுறைகளே இல்லை எனலாம்.

அறம் பொருள் இன்பம் பேசிய திருவள்ளுவ நாயனார் முப்பாலின் பயன் வீடு பேறே என்பதை படிப்பவர்களே அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு தனியாக பாடல்கள் ஏதும் எழுதாது நம் கருத்துக்கே விட்டுவிட்டது தெய்வப் புலவரின் அதீத கொரல் (ஆம் குறள் அல்ல - வள்ளுவ நாயனாரின் தெய்வீகக் குரல்தான் 1330 பாடல்களும்).

சிறந்த கட்டமைப்பைக் கொண்ட திருக்குறளின் 1330 பாடல்களும் பரிபாஷை என்னும் சங்கேத மொழியால் சமையப் பட்டது. எந்தப் பரிமாணத்தில் பார்த்தாலும் அதற்கு ஒரு பதில் வைத்திருக்கும் ஒப்பற்ற நூல் என்பதை யாவரும் அறிவோம்.

புணர்ச்சி என்ற என்ற சொல்லின் அடிப்படையான ஒழுக்க நெறிகள் பற்றி வள்ளுவம் என்ன சொல்கிறது என்பதை ஒரு பாடல் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறேன்

அதாவது

ஒழுக்கம் விழுப்பம் தரலாம்
ஒழுக்கம்உயிரினும் ஓம்பப்படும்.

விழுப்பம் என்றால் தீட்டு.

ஒழுக்கம் எவ்வாறு தீட்டடையும்.

ஏதோ முரண்பட்ட கருத்தைக் கூறுவது போல இருக்கிறதே.

இங்கேதான் வள்ளுவம் பரிபாஷைத் தத்துவத்தை உணர்த்தி இந்தப் பாடலைத் தந்துள்ளது.

ஒழுக்கம் என்பது உயிரினால் ஓம்பப் படும் அதாவது ஆராதிக்கப்படும் அல்லது கையகப்படுத்தப் படும் அல்லது கடைப்பிடிக்கப்படும் ஒரு வஸ்து. நாம் கொண்டுள்ளது போல் ஒழுக்கம் என்பது ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறை மட்டும்தான் என்ற அர்த்தம் மட்டுமல்ல.

புணர்ச்சி என்பது வெறும் இனப்பெருக்கத்திற்கான செயலா, அப்படி இல்லை என்றால் என்றும் புணர்ந்துகொண்டே இருக்கலாமா ? அப்படி எப்பவும் புணர்வது என்பது சாத்தியமா ? இதில் எப்பவும் புணர்ந்து கொண்டே இருந்தால் கல்வி வீடு பயனை அடையலாம் என்று வள்ளுவம் கூறுகிறது.

வெறும் உடல்ப் புணர்ச்சி என்ற செயல் மிருகத்தின் இயல்பு. இது அதைத்தாண்டி ஒரு பெரும் பொருளைப் புணரும் உயரிய நிலை.

இதை விரிவாகப் பார்ப்போம்

மனிதனின் புணர்ச்சி என்ற உந்து செயலுக்கு உடற் தீ தான் முதல் ஊக்கி என்பதை நாம் யாவரும் அறிவோம். காமாக்னியின் தூண்டுதலால் உடலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க புணர்ச்சி எனும் வடிகாலால் நிவர்த்தித்துக் கொள்வது உயிரினங்களுக்கு விதிக்கப்பட்ட விதி.

இனப்பெருக்கத்திற்கு மூலமான ஒரு செயலை விரசமாக்கியதில் மனித குலம்தான் முதன்மை வகிக்கிறது. மிருகங்கள் இயல்பாய் அடங்கி/அடக்கிக் கொள்ளும் ஒரு காரியத்தில் மனிதன் மிருகமாய் இயல்பு மீறி இருப்பது புணர்தல் என்னும் ஒரு செய்கையால்தான் என்றால் மிகையல்ல.

இதை வள்ளுவப் பெருந்தகை எவ்வாறு விளக்குகிறார் என்றால் ஒழுக்கம் என்ற உயர்குணம் ஒரு காலகட்டத்தில் விழுப்பம் தரலாம் அதாவது தீட்டாகிப் போகக் கூடும் அபாயம் கொண்டது. ஒருவன் உலக ஒழுக்கத்தில் முதன்மையாய் இருந்து புணர்தல் என்ற ஒன்றைப் பற்றி சிந்திக்காதிருந்து பத்தியம் காத்தாலும் விழுப்பம் என்னும் தீட்டுககு உரியவனாகத்தான் இருக்கிறான் மனிதன்.

உயிரை உற்பவிக்கும் மூலமான நாத விந்தானது பத்தியத்தோடு இருப்பவருக்கும் கட்டுப்பாடின்றி கசிந்து விடும் இயல்பு கொண்டது. எனவே அதை வலுக்கட்டாயமாக அடக்கி நிறுத்த முயலவேண்டாம் என்பதையே பெரியோர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் தறி கெட்ட உடற்புணர்ச்சி எமனின் வீட்டிற்கான பாதையின் முதற்படி.

ஆனால் ஒழுகும் தன்மையுள்ள நாத விந்துவை ஒழுகாமல் ஆக்கி தீட்டுத் தொடராத சுத்தத்தில் ஒருவன் ஆகிக் கொள்ள வேண்டுமானால் நன்மையான நெறிமுறைகளையே ஒழுகி வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டாலே சாத்தியப்படுகிறது.

எனவே ஒழுக்கம் என்பது என்னவென்றால் ஒழுகும் ஒரு பொருளை ஒழுகாமல் ஆக்குவதற்கு உதவும் தெய்வீக நெறிகளைக் கைக் கொள்வதே ஒழுக்கம் என்ற உயர்பண்பு ஆகும். அதாவது அவ உராய்வான புணர்ச்சியைப் புறக்கணித்து, அக உராய்வில் இறைவனைப் புணர்ந்து, புறத்தைப் பற்றிய சிந்தனைகளை நிராகரித்து அகத்தை கைக் கொள்ளும் உபாயம் அறிந்தோருக்கே திரவ நிலையிலுள்ள ஒழுகும் தன்மையுள்ள ஒரு வஸ்து திட நிலையான மணியாக உருமாறி கீழே ஒழுகாமல் மேலேறி குண்டலினி என்ற ஏகாந்த மணியாக மாறி பரலோகம், கைலாயம், வைகுண்டம், மெகராஜ் என்ற சொர்க்க புரிக்கு அழைத்துச் செல்லும்.

இது விந்தடக்கம் என்ற புணர்ச்சியை வகைப்படுத்திக் கொண்டோருக்கே கைபலிதமாகும். இது ஒரு பிரம்ம வித்தைச் செயல். இது சாமானியர்களால் கைபோடமுடியாது. உலக வாழ்க்கையிலும் உழன்று கொண்டு மெய்வீடடையும் தியான வழிகளிலும் சிறிது நேரம் செலவிட்டால் போதுமென்று இருந்து விட்டால் வீடு பதம் என்பது வாய்க்காது.

எனவே ஒரு அருட்குருபிரானின் உதவியோடு என்றும் புணர்ந்திருக்கும் செயல் ஒருவனுக்கு வாய்க்குமேயானால் இந்த இல்லறப் புணர்வு அதன் அணுவின் மயிரிழை அளவிற்குக் கூட ஒப்பாகாது. அப்படிப் பட்ட மேலான இன்பத்தைத் தருவது அந்தப் புணர்ச்சி. அந்தப் புணர்ச்சியில் விந்து நாதம் சிதறாது மணியாக உருமாறி என்றும் பேரானந்தப் பெரு வெளியாம் துவாத சாந்தம் என்னும் இறைவனுடைய மைதான வீதியில் ஆனந்த எக்களிப்போடு என்றும் இளமையாய் நரை திரை மூப்பு என்ற இல்லறத் தடைகளைத் தாண்டி இன்பமயமாய் திளைத்து இருக்கும்.

இப்படிப்பட்ட தீட்டு வெளியாகாத சுத்தத் திருமேனிக்கே சைவத்திருமேனி என்று பெயர்.

சைவம் என்றால் பரிசுத்தம். அதே போல் இஸ்லாம் என்றாலும் பரிசுத்தம்.

எல்லா மதங்களும் போதிப்பது ஓழுகும் தன்மையான அசுத்தத்தை ஒழுகாத தன்மையுடைய பரிசுத்த ஒழுக்கமாக மாற்றிக்கொள்ளும் மார்க்கத்தை கடைப்பிடிப்பதுதான், இதை எப்பொழுதும் புணர்ந்து கொண்டே இருப்பதுதான் மனிதனின் நித்திய கடமை. மற்ற குடும்ப பராமரிப்பு அதற்காக பணம் ஈட்டுவது போன்றவை ஏனைய மிருக வாழ்க்கைக்கு ஒப்பானதுதான். அதற்காக மட்டும் நமக்கு ஆறாம் அறிவு தரப்படவில்லை.

இந்த புணர்ச்சியினால் விளைவது ஏழாம் பிறப்பென்னும் தேவப்பிறப்பு, அசுத்த பிண்ட உருவத்திலிருந்து சுத்த சைவத்திருமேனியாகப் பிறப்பது. அது தன்னகத்துள்ளேதான். சொர்க்கம் என்பது நரகம் என்பது நம் உடம்பில்தான் அமைக்கப்பட்டுள்ளது. எங்கோ ஆகாயத்தில் இல்லை. இதை அறிந்து பயணப்பட்டால் என்றும் புணரும் ஒரு அதி மகோன்னதப் புணர்ச்சியின் உச்சம் அனைவராலும் அறியப்படலாம்.

அது எக்காலமோ? யாருக்கோ?

Monday, February 25, 2008

தீ

வாழ்க்கையின் உயரிய தத்துவம் தீ.

தீக்கு இரையாகவிருக்கும் ஈரவிறகுதானே நாமெல்லோரும். இதுதானே சத்தியம். உயிரெனும் தீ உறங்கிவிட்டால், உற்றார் ஏது உறவேது. இரண்டறக் கலத்தல் தீயில்தானே. அறுதல் என்பதே இல்லையே.

அக்கினியின் கருணை பாவத்தின் சுவடைக் கூட இல்லாமையாக்கிவிடுமே. நாணுமே அக்கினி இந்த நயவஞ்சக மானுடத்தைக் கண்டு.

ஞானத்தின் திறவுகோல் தீ தானே.

அது இடும் நடனத்தை ரசிக்க நல்ல மனம் வேண்டும். தீயை நேசித்த போது, நிலையாமையின் நிதர்சனம் நிஜமாய்த் தெரியும்.

பெண்கள் பணி செய்து குடும்பத்தைக் காக்க தீயைச் சுமந்து பவனி வரும் காலமிது.

ஏனிந்த உழைப்பு, என்ன அடையப் போகிறோம். தீ உணர்த்தும் தீஸிஸ்.

உழைப்பின் உக்கிரம் அக்கினியின் சாயல்.

உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தாய்மை.

எங்கே போகிறோம் நாம்.

நட்பு

நட்புக்கு நல்ல இலக்கணம் நம்பிக்கை. எதிர்பாலில் மட்டும் ஈர்ப்பு இருந்தால் அது நல்ல நட்பாக இருக்க முடியாது.

எனக்கு ஒரு நண்பன் உண்டு. உண்டு உறங்கி ஒன்றாக வாழ்ந்து, ஏழை பணக்கார வித்தியாசமின்றி இருந்த காலங்கள். ஒரே ஒரு பாலம்தான். அதன் பெயர் பரஸ்பர நம்பிக்கை. என்னை நம்பி சகலத்தையும் ஒப்படைத்த அவனுக்கு சில பழக்க வழக்கங்களால் என்னைத் தவிர்த்து தள்ளிப் போக வைத்தது.

காதலை உருகி உருகி எழுதும் பல பேருடைய தவிப்பை ஒரு நல்ல நண்பனை விட்டுப் பிரிந்திருக்கும் அனுபவத்தால் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். காதலியிடம் கூடப் பெறமுடியாத அன்பு நல்ல நண்பர்களிடையே ஏற்பட வாய்ப்பு உண்டு.

காதலியிடம் வைக்கும் அன்பு தூய்மை சார்ந்தது அல்ல. வெற்றி பெற்ற காதலுக்கு முடிவு உண்டு. அதுதான் திருமணம். பின் கலவி. அங்கே காதல் என்பது முடிவுக்கு வருகிறது.

புதிய உறவு மனைவி என்று மாறுகிறது.

ஆனால் நல்ல நண்பர்களின் நட்பு வார்த்தைக்குக் கொண்டுவர முடியாத இனிமைகளின் தொகுப்பு.

தூய்மையின் உருவை காதலியைத் தாண்டி நண்பர்களிடம் காணமுடியும்.

சிறப்புக்குடைய எழு பிறப்பு எனும் ஏழாம் பிறப்பு

மனிதன் நிச்சயமாகச் சிறப்புக்குடையவன்தான்

தன் பெருமை அறியாத மயக்கம்தான் அவனை மிருக குணத்தில் ஆக்கியுள்ளது. இறை குணம் தன்னைக் காட்டாது . அதைத் தேடி அடைய வேண்டியது ஒவ்வொரு மனுவுக்கும் கடமையாயுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு.

எழுபிறப்பும் ஏமாப்புடைத்து என்பது வள்ளுவம் வகுத்தவழி.

ஏழாம் பிறப்பு ஒன்றை மனிதன் அடையவேண்டும்.

அது இறந்து இறந்து பிறக்கும் புது பிறப்பு அல்ல.

பிறக்கும் போது சவமாகத்தானே வந்தோம். கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு அனைத்தும் கொண்டிருந்தாலும் உயிரற்ற பொருளாய் வந்தோம்.

முதற்பிறப்பு பிறந்தது சவம் எனவே பிர+சவம் என்ற பேராயிற்று.

அறிவு கொண்டோம். இரண்டாம் பிறப்டைந்தோம்.

கண், காது, மூக்கு, வாய், உணர்வு அனைத்தும் உயிர் பெற்று மனிதனாகத் தகுதியடைந்தோம்,

மூன்றாம் பிறப்பு அன்னையை அறிந்தோம் அவள் தரும் பாலுக்காக. அவளாள் அனைத்து சுற்றம் அறிந்தோம்,

நான்காம் பிறப்பு மிட்டாய்க்கு மட்டும் ஆசைப்படும் தீனிப் பிறப்பு, செல்வங்கள் அனைத்தும் இருந்தாலும் அதன் மதிப்பு அறியாது மிட்டாய் இனிப்புதான் உலகத்தின் அதிசிறந்த பொருள் என்ற மாயையில் காசு வேண்டுமா, மிட்டாய் வேண்டுமா என்றால் மிட்டாயைத் தேடும் அறிவில் இருந்தோம்,

ஐந்தாம் பிறப்பு காசைத் தேடிக் கொண்டால் இனிப்பு சாம்ராஜ்யத்தையே தனதாக்கிக் கொள்ளலாம் என்று மிட்டாயை விட்டு பொருள் தேடும் முகத்தான் கல்வி கேள்வியில் பிறந்தோம்.

ஆறாம் பிறப்பால் நன்மை தீமை அறிந்து பொருள் தேடும் வழியில் தடைகளை நீக்கிக் கொள்ள எந்தத் தவறையும் செய்யும் பகுத்தறிவின் பிறப்பை பாழுக்கு ஆக்கிக் கொள்ளும் ஒரு பிறப்பைப் பெற்றோம். இதோடு நின்று விட்டது மனிதப் பிறப்பு.

ஏழ் பிறப்பென்பது செத்து செத்து பிறப்பது அல்ல. தேகத்திலேயே ஒவ்வொரு முறையும் புதுப்பிறப்பாக கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் புதிய தேகத்தை அடைந்து இதோ ஆறு பிறப்பை அடைந்து மனிதனானோம். ஆனால் மனிதன்தான். அதற்குரிய செயல்தான் செய்கிறோமா என்றால் இல்லை. நிச்சயமாக இல்லை. மிருகத்தைவிட கேவலமான பல ரூபங்களை எடுக்கும் வல்லமையைக் கொண்டோம்.

ஏழாம் பிறப்பு ஒன்று பாக்கியிருக்கிறது. அது தேவனாகப் பிறப்பது. மனிதன் இறைவனாக ரூபம் கொள்ளும் ஒரு அதிசயப் பிறப்பு அது. இறைவன் எங்கோ ஆகாசத்தில் இல்லை. நாமே இறைவன். அதை அறியமட்டும் நம்மால் முடியவில்லை. இது சாபமா ? வரமா ?

முடிவு அவரவர் கையில்.

ஆன்மநேய ஒருமைப் பாடு

ஆன்மாவையே இன்னதென்று அறியாத நாம் அதன் ஒருமைப்பாடை எப்படிக் கொண்டு வர முடியும்?

உயிர் வளர்க்கும் உபாயத்திற்கு உறுதுணையாய் இருப்பது உடலே. உடலின் ஆழத்தில் இருட்கோளத்தில் உறைந்திருக்கும் ஆன்மாவினை சுட்டிக் காட்டி இதுதான் ஆன்ம சொரூபம் என்று அறிவிக்க யாரும் இல்லாததால் மாயையின் மயக்கத்தில் வெறும் வார்த்தையளவில் நின்றுவிட்டது ஆன்மநேயம் என்பது.

ஆன்மா என்னும் அப் பரம் பொருள் அனைத்து உடலிலும் மாயையாகக் கலந்து விட்டிருப்பதில் ஆன்மாவைத் தெரியாததால்தான் உயிரின் உடல் சுயநலம் ஒன்றைமட்டும் முன்னிருத்தி இன்பத்தை நோக்கியே ஓடுகிறது.உடல் இன்பம் மாயை என்பதை ஆன்ம அறிவில் திளைத்திருக்கும் ஒரு அருட்செம்மலின் வாய்மையால் அவர்களின் பேரிரக்கத்திற்கு ஆளாகி. ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் அவ் அருட்பேராற்றலுக்கு அளித்து நிர்வாண நிலையாம் சகலத்தையும் அச் செம்மலின் பால் வைப்போமேயானால் ஆன்ம ஒளி சகல மனித உயிரில் எங்கு ஒளிந்திருக்கிறது என்பதை அறியமுடியும்.

எல்லா வேதங்களும் அதைத்தான் கூறுகிறது.

புனித விவிலியம் கொரிந்தியர் அதிகாரத்தில் "நீங்கள் உலகிற்கு வெளிச்சமாயிருங்கள்" எனவும்

மச்சம் என்னப்பெற்ற மீனின் மாம்சமும் மற்றும் ஏனைய பிற உயிர்களின் மாம்சமூம் சதையும் இரத்த்தினால் தோற்றத்தில் மனிதனுடைய மாமிசத்தைப் போல இருந்தாலும் ஒவ்வொன்றும் தனிக் குணம் கொண்டுள்ளதைப் போல ஆன்ம அறிவைப் பெற்றவர்களின் மாம்சம் என்ன வென்று அறியும்போது அழி உடலின் மாம்சத்திலிருந்து அவர்களின் சரீரம் எந்த அளவு மாறுபட்டு உன்னதத்தில் உள்ளது என்பதைக் காணலாம்.

மனித உயிரிலிலேயே இவ்வாறு இரு நிலைப் பாடு கொண்ட தோற்றம் இருக்கும்போது, மிருகங்கள் கீழான பிறப்பின் வகையில்தான் வருகிறது.ஆறு பிறவி அடைந்து மனு என்ற நிலையில் ஏழாம் பிறப்பாகிய ஒரு பிரம்மஷேட்டரின் திருமுகத்தில் அவர்கள் வாய்மையெனும் அறிவாகாரப் புதையலில் மறு பிறப்பெய்தினால் மனு என்ற நிலையிலேயே அமரனாகவும் ஆக முடியும்.

இதையே விவிலியம் "ஒருவன் ஆவியினாலும் பரிசுத்த ஜலத்தினாலுமன்றி மற்றபடி மறுபிறப்பை அடைய முடியாது" எனக் கூறி ஒவ்வொரு மனுவும் மறுபிறப்பை இந்த சரீர நிலையிலேயே அடையப் பாடுபடவேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்தப் பொதுவான மெய்யுண்மை புனித திருக்குரானிலும், பகவத் கீதையிலும் பத்தி பத்தியாகக் கூறப்பட்டிருக்கிறது.

எந்த மதம் மனிதனைக் கூறு போடச் சொன்னது? மிருக அறிவில் இருப்பதால்தான் மதத்தின் பெயரால் இவ்வேற்றுமை உலகில் நிலவுகிறது. அதுவும் மாயைதான்

மனித சரீரத்தின் ஒப்பற்ற பெருமையை பறை சாற்றி அறிவிப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் இத்தனை சாத்திரங்களும் சம்பிரதாயங்களும்.

தமிழ்த் தாய் இதில் நல்ல பங்காற்றியிருக்கிறாள்.

தோலை விழுங்கி சுளையை எறியும் அறிவற்ற பிறப்பாக இம் மானுடம் ஆனது கண்டு ஒவ்வொரு ஞானியர்களும் இரக்கத்தால் அவத்தை தாரமாக்கி அவதாரம் எடுத்து வருகிறார்கள். மனிதனின் அலட்சியப் போக்கால் இறை அவதாரங்களை சாதாரணமான மனித தோற்றமாகக் கருதிப் புறக்கணித்துவிட்டதால்தான் "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று வள்ளல் பெருமானார் போல் பல ஞானிகளும் சலிப்புற்று இவ்வுலகைத் துறந்துவிட்டனர்.

இதனால்தான் இத்தனை கேடு இந்த மனித சமுதாயத்திற்கு.

சாலைஜெயராமன்

நாயும் பன்றியும் கீழ்க் குணச் சாயல்

கேவலமான பிறப்பில் நாயும் பன்றியும் இருந்தாலும் அதையும் பைரவர் என்றும், வராகர் என்றும் தெய்வமாகக் கொண்டாடுகிறோம்,கீழான இந்த உயிரிலும் கூட இறைத்தத்துவங்கள் கோடானு கோடி உள்ளது. தன்னையும் தன் ஆற்றலையும் மறந்து இருப்பது பன்றி, யானையைவிட பலம் வாய்ந்தது. எந்த நஞ்சும் தீண்டாதது. இருப்பினும் பேடித்தனத்தின் உச்சம்தான் பன்றியின் குணம்.அதே போல் உடன் அனைத்து நிகழ்வுகளையும் மறக்கும் குணம் நாய்க்கு உண்டு. எஜமான விசுவாசம் போன்ற அதீத குணங்கள் இருந்தாலும் பிறப்பில் ஒரு இழிநிலையான உயிரினம்தான் இந்த மறதிக் குணம் கொண்ட நாயின் பிறப்பு.இறைவனாக வேண்டிய அத்தனை தகுதிகளும் தான் பெற்று அந்த இறையை தன்னில் அறியாமல் விண்ணிலும் மண்ணிலும் கல்லிலும் தேடும் மனிதன் தன் இயல்பை மறந்து பன்றி, நாயைப் போல வாழ்ந்து கீழான இந்த உயிரினங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.இதை இவனுக்கு அறிவவுறித்தி நல்வழிப் படுத்துவதற்காக இறைவன் ஒரு அவதாரமே எடுக்க வேண்டியதாயிற்று. புராணத்தில் நாய் பன்றி இரண்டுக்கும் அவதார மகிமை உண்டு.

Sunday, February 17, 2008

கிளர்ச்சி

கிள்ளி வருமா கிளர்ச்சிகள்
உணர்வுகளைக் கிள்ள
உவகையான வார்த்தை போதும்
உண்மை கிள்ளப்பட
உயிரத் தெழும் போராடும் குணம்
எதைக் கிள்ளினால்
துன்பம் தொலையும்
உடலைக் கிள்ளாது
உணர்ச்சியைத் தூண்டும்
உபாயம் அறிந்தோரே
உண்மையில் ஒலிவாக்கள்
ஒலிவாமலையொன்று
உடம்பினில் உண்டு அங்கே
பாரிஜாதமும் செண்பகமும்
கிள்ளிக் கொள்ளும் பக்குவமாய்
ஒன்றையொன்றுகிள்ளியே
காட்டும்பரமனின் நல்லடியை
பக்தியால் என்றும்
பரவசம் கொள்ள

Tuesday, February 12, 2008

முதலும் முடிவும்

முதலும் முடிவும்
மூலவனின் கையில்
முடிவைத் தேடி
முதலை இழந்தோம்
ஆக்கிய முதலை
ஆணவம் அழிக்க
மானம் இழந்தனிலை
மனிதப்பிறப்பினுக்கு
படிகள் கடந்து
பகலவன் முகத்தில்
பளிச்சென்று நின்றால்
இழந்த முதலும்
ஈடுகட்டி இல்லம் வரும்
மூலவனும்
முகம் பார்த்து
முக்தியெனும் முதலை
மும்முறை ஈவான்
கேடு கெட்ட
இப்பிறப்பின்
பாடுகள் பலவும்
பாவம் என்பது
பகல்போல் தெரியும்
கோடிகண்ட
கோமானின்
கோதறு அமுதத்தால்
முதலும் வட்டியும்
முழுதாய்ப் பெறலாம்

Sunday, February 10, 2008

குரு வணக்கம்

குருவின் மகிமை
கூவி அழைப்போர்க்கு
குவியும் புண்ணியம்
குவலயத்தில் கோடி
எண்ணும் எழுத்தும்
அறிவித்த எம்பிரான்
ஏகமும் அவனே
ஆகமமும் அவனே
இல்லாமை அவனே
எல்லாமும் அவனே
அணுவும் அவனே
அண்ட பிண்டமும் அவனே
அருள்நிறை வாக்கினை
அவனிக்கு அளித்து
அருங்களைப்பாற்றிய
அண்ணலே சற்குருவே
நிந்தன் பொற்கழல் போற்றி

Friday, February 8, 2008

சூளுரை

நொறுங்குகையில் நுடமாகிவிடுவோம்
இரும்பான மனம் கொண்டு
எதனையும் எதிர் கொள்வோம்
சிங்கமெனச் சீறி சிறு நரிக்
கூட்டங்களை சிந்தையில் அகற்றுவோம்
சிறப்பான செயலாலும்
சீரிய நெறிகளாலும்
சிறு அரும்புக் கூட்டங்களை
சிற்றினம் சேரா
சிகரத்தில் ஏற்றுவோம்
உரம் கொண்ட உள்ளத்தால்
உயர்த்துவோம் நம் பெருமை
உறவை உலுக்கும்
ஊன அறிவு குற்றங்களைக்
குணத்தாலே விலக்கி
கொள்கைக்கு குரல் கொடுப்போம்

Tuesday, February 5, 2008

விண்கலம்

விண்ணளாவிப் பறக்கலாம்
விண்கலங்கள் தேவையில்லை
தன்னில் ஒரு நிலவு
தனியாய் இருக்கிறது
வெளியில் பறக்க
வினைகளைச் சோ்க்கிறோம்
உள்ளுன் நிலவு
உவகையூட்டும் உணர்வு
அண்டம் என்பதும்
ஆகாசம் என்பதும்
அவனியில் அகத்துள்ளே
அமைதியாய்ப் பறப்பதற்கு
விண்கலங்கள் தேவையில்லை
வித்தகம் என்னும் விபரம் வேணும்
மனம் என்னும்
மாயக்குதிரை
மார்க்கத்தை மாயமாக்கும்
கவனக் குளிகையாம்
கார்மேகக் குதிரையில்
கருத்தாய் கலக்க
விண்கலத்துக்கு ஒப்ப
விரைவாய்ப் பயணிக்கலாமே

Monday, February 4, 2008

நாரணன் நாமம்

நாவினால் சுடுவது
நாற்காரண ராஜ நிலை
நாதாங்கி நீக்கி
நடுநின்ற பொருளை
நாமம் விளித்து
நன்மாறம் கூற
திரண்டுவரும் நீதமது
தீங்கில்லா வெண்ணையாம்
நவநீதம் என்பதும்
நல்ல கதி என்பதும்
நாரணனின் நாமமே
வெண்தாளை வேக வைத்து
சுடாத தீயை
சுகமுடனே சுகித்திருக்க
சூட்சுமத்தின் சூத்திரத்தை
சூரியனுக்கு அர்ப்பணித்தால்
தீபார்த்த முத்தை
தீங்கிலாமல் காணலாமே

Friday, February 1, 2008

மனிதன்

நாயின் குணம் நாவிலே
நரியின் குணம் நினைவிலே
பாம்பின் குணம் பல்லிலே
பசுவின் குணம் பாலிலே
படைப்பின் பல குணங்களும்
பாடம் ஏதும் கொள்ளாமல்
பக்குவமாய் பற்றியது
பாவம் இந்த மனுவிற்கு
பாதி மதி சூடிநி்ற்கும்
பரம சிவன் குணமும்
பாற்கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் குணமும்
பாழ்பட்ட மனிதனுக்கு
பல நாளும் தெரியலே
எத்தனையோ இறைகுணங்கள்
ஏராளமாய் இருந்தும்
மனிதன் என்னும் மிருகத்துக்கு
இவை அனைத்தும் இன்னமும்
இருட்டில்தானே மறைந்திருக்கு
எடுத்தயிம்ப இறைவனும்
இரக்கத்தோடு வந்தால்கூட
இகழ்ந்து விரட்டும் இயல்புதான்
இவன் கொண்ட இழிகுணம்
கூறிவந்த குற்றமெல்லாம்
மிருகத்தின் குணங்களாம்
மனிதனுக்கு என்ன குணம்
மறந்தும் கூட தெரியலே
மறைந்திருக்கும் மனிதகுணம்
மறையோன் மட்டும் அறிவானோ
எண்குணத்தான் என்பதெல்லாம்
இறைவனுடைய இயற்பெயேர
இறைவனின் குணம்
இன்னதென்று அறிந்துவிட்டால்
இந்நிலத்தில் நீயே
இறையென்று அறியலாம்
குற்றமற்ற குணம் கொண்டு
கொற்றவனாய் வாழலாம்

காதல்

காலம் நீண்டதொரு பயணம்
இதில்கண்ணிமைக்கும் நேரம்
காதல்வய வாழ்வு
காட்சிகளி்ன் கோலங்கள்
கருக்கலைப்பு நாடகம்
காதலுக்கு கைம்மாறு
காதெலென்னும் சித்தாந்தம்
கண்ணைக் குருடாக்கும்
காதலிக்க கடல்போல்
கருத்துக்கள் பல உண்டு
எதிர்மறைப் பாலின்
ஏக்கத்தைவிட்டு ஏறி வர
இன்னும் எத்தனையே இன்பங்கள்
இந்நிலத்தில் உண்டு
இல்லாத காதலை
எடுத்து எறிந்து விட்டால்
இன்மையில் எல்லாம்
நன்மைதானே

Sunday, January 27, 2008

பயம்

மாறாக ஓடும் மனதின் மயக்கம்
மானுடவ வாழ்வின் பயப் பரிணாமம்
மரண பயச் சவுக்குதான்
மாற்றுகின்ற மாமருந்து
பயம் என்பது வரமாகும்
பயத்துடன் பக்தி வேண்டும்
பயபக்திதான் பதியைக் காட்டும்
பயமில்லா வாழ்வு
மிருகத்தை ஒக்கும்
பயத்துடன் பொறுமை காத்தால்
பத்தியம் தேவைதானோ
பாசத்தால் விளையும் பயம்
பாதையைக் காட்டாது
பயத்தின் முடிவிடம்
பரமபத வீடு

Saturday, January 26, 2008

ஏழை

இல்லாத ஒன்றுதான் ஏழ்மையைக் காட்டும்
இருப்பவை யாவும் இறுமாப்பின் வெளிச்சம்
எல்லாம் இருந்தும் இல்லாததற்கு ஏங்கும்
இயல்பிலே ஏழையான எத்தனையோ போ்கள் உண்டு
உணவு இல்லையென்று அழுவாரும்
உணவு செரிக்கவில்லை என்று அழுவாரும்
உணவுக்காகவே உழைப்பாரும்
உணர்வில் ஏழைகளே
ஈதல் என்பதன் இலக்கணம் அறிந்தால்
இறைவனின் நிலையை அறியலாம்
ஏழையாக யாரையும் இறைவன் படைக்கவில்லை
அறிவின் நிலையறியா யாவரும்
எண்ணத்தில் ஏழைதானே

வழிகள்

வருவதில்லை வழிகள்
வந்ததும் செல்வதும் வழி வழியே அது
விதியின் வசத்தால் விளைந்ததுதானே
வழியின் வாசலில் விதியும் நுழைவதை
மதியின் வழியே மடக்கிப் பிடித்தால்
மயக்கும் விதியை மாய்க்கவும் கூடுமே

Thursday, January 24, 2008

ஞாபகம் வருதே

ஞாபகங்கள் நிறைவாவது
ஞானத்தின் நிலையாகும்
நினைப்பும் மறப்பும்
நிலையாமையின் இருப்பாகும்
அனைத்தையும் இழப்பது
அறிவுக்கு அழகாகும்
நிலையிடம் காணுவது
நீதர்கள் நிலையாகும்
இறவா னிலை அது
ஞாபகங்களின் நிறைவாகும்

பாரத மண்ணின் பெருமைமிகு மைந்தன்



சேற்றைக் கூட தின்னும் நாளும் சீக்கிரமே வந்திடுமோ
வாடி நின்ற என் வயி்ற்றின் வாட்டம் போக்க முடியலியே
சூதும் என்றும் வாதும் என்றும் ஏதேதோ சொல்லுவார்கள்
சொந்தம் யாரும் இல்லாததால் சொல்லின் அர்த்தம் புரியலே

சோறு எனக்குக் கிடைச்சாத்தான் வேறு பாஷை புரியுமே
சோறு என்ற ஒன்றுதான் சொர்க்கமாகும் இப்போது
தாயிருந்தால் அவளும் தவிக்கவிட மாட்டாளே
தாயைத் தேடி அலுத்துவிட்டு தவித்து வரும் நாளையில்

தாகம் தீர்க்கும் யாருமே தாயாய் எனக்கு ஆவாளே
என்னைப் போல எத்தனையோ ஏழைக் கூட்டம் வாடுது
எனக்கு இது புதுசுதான் இன்னும் கொஞ்சம் பழகணும்
பாதி உடம்பு பசியிலே பங்கப்பட்டு போனது

பெருமைமிகு பாரதத்தின் பாரம்பரியப் பெருமையில்
என்போல பால பரதேசிகளுக்கும் பலமான பங்கிருக்கு
பழம் பெருமை பேசுவதால் பலனொன்றும் இல்லையே
பக்குவமாய் எங்களுக்கும் பாதை ஒன்று காட்டுங்களேன்

நிறை குணம்

குறைந்துவிடும் அனைத்தும் குவலயத்தில்
குன்றாத ஒன்று குறையில்லாமல் வேண்டும்
காதலாலும் காமத்தாலும் கவிந்து நிற்கும் கடமும்
கடைசியில் ஒருநாள் காலனுக்கு உணவாகும்
காலத்தே பயிர் செய்யும் கருத்தினை அறிந்தால்
குறையையும் நிறைவாய் கொள்ளலாமே.

Sunday, January 20, 2008

அங்கயற்கண்ணி பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்


சைவக் குரவர்கள் வரிசையில் கடைக் கலியில் மக்களின் வெங்கலித் துயர் துடைப்பதற்காக அவதார மகிமை பெற்று பூர்வாசிரமத்தில் காதிர்பாட்சா என்ற திருநாமத்தோடு அவதரித்த கர்த்தாதி கர்த்தர், மகதி கல்கி என்னும் சாலை ஆண்டவர்கள் அறைந்து வைத்த சைவத் திருமந்திரமாம் "மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மத" உற்பவ உற்பன்னர், மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வளித்த எம்மான் சாலை ஆண்டவர்களின் மஹாப் மந்திரப் பிரேரணையில் சிவனிலை பற்றிய தகவல்.
அங்கமே அனைத்துமாம்
அயனே சிவமாம்
கண்ணியே அன்னையாம்
அங்கத்தில் அயர்ந்த அயனை
அடைந்த கண்ணியே அங்கயற்கண்ணி
அவள் அடைந்த சிவம்
வெளியானால் சிவம் போன
அங்கம் சவமாகும்
சைவ சித்தாந்தங்கள் ஜீவனை சிவமென்கிறன. அங்கத்தில் சிவனிலையின் இருப்பே சக்தியின் ரூபத்தில் வெளிப்படுகிறது. அச் ஜீவன் விலகினால் சக்திக்கு வேலையில்லை. சவம் என்ற பெயரெடுத்து அவவுடலைத் தாங்கி அழிந்து படுகிறது. அழியாநிலையைப் போதிப்பதுவே சைவம்.
சைவத்திருமேனி தாங்கி வரும் குருகொண்டல்களின் வாய்மை எனும் அமிர்த வர்ஷிப்பினால் அங்கத்தில் அயர்ந்திருக்கும் சிவனிலையை அறிந்து கொண்டு அழியா நித்திய உடலை ஜீவன் பெருவதுவே முக்தி நிலை என்பதுவே அண்ணல் அவர்கள் எங்களுக்கு காட்டிய அரு நெறி. அது சிவ நெறி.

இறைவனின் இன்முகம்


இறையின் இருப்பை இன்முகத்தில் காட்டும்
இனிய நிலைதானே இறைவன் தந்தது
கள்ளங்கபடில்லா இந்னிலை காலமும் கனிந்து நிற்க
வள்ளலின் வாய்மையை வணங்கி வாழ்த்துவோம்
அறத்தின் அழகை அள்ளித் தந்தான் இறைவன்
காலத்தால் இக்குணம் கலங்காமல் காக்க
காத்து நிற்போம் பதம் பணிந்து

பூமித்தாய்

மானம் கெட்ட மடந்தை அவள்
பொறுமைக்குச் சொந்தக்காரி
வாழ்வளிக்க வந்த அவள்
வானம் பார்த்து நிற்கிறாள்
ஈனம் நிறை இன்னல்களால்
இயன்றவரை இடும்பளிக்கும்
இச்சகத்து மாந்தர் தம்மை
இரும்புக் கரம் கொண்டு
இதுவரைஇன்னல் இழைக்க நினைக்காதேன்
மானம் கெட்ட மடந்தை அவள்
மங்கை நல்லாள் பூமித்தாய்

Saturday, January 19, 2008

வர்ஷிணி

வர்ஷிணி என்பது வாய்மையே
மெய்கண்ட மன்னரின் மேலான வர்ஷிப்பு
கல்வியற்ற குலத்தையும் காய்ந்து
நிற்கும் பயிரையும் உயிர்ப்பிக்கும் ஊற்று

மழை

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமோ
தாகமே இல்லையென தவறுதலாய் நினைத்துவிட்டாள்
தாகம் தீர்க்க வேண்டுமென்று தவமாய் தவித்திருந்தால்
தாவியே தான் வருவாள் தரணியெங்கும் பெய்வாள்
மோகமும் நீக்கிடுவாள் முகமும் சுழிக்கமாட்டாள்
தாகத்தோடு தேடுவோர்க்கு தமிழ்வழியே பொழிவாள்
தாகம் தீர்ந்த பேர்க்கு தவசியென்ற பெயரிடுவாள்
ஆனந்தவர்ஷிணி அமிர்தம் பொழியும் அம்மணி
அவள் கருணையென்னும் மழையால் காலமெல்லாம் காப்பாள்

பரமபதம்

செய்ய பல செய்திகள் உண்டு
செம்மையாய் செய்யும் திறம் கொணடால்
செய்திகள் சேவையாகும்
சேவையின் பலன் சோகத்தை அசோகமாக்கும்
சோகநிலை மாற்றி யோக நிலை கூட்டும்
கூடும் குறிப்பறிய கொள்கை பல உண்டு
உண்டு கொழுக்கும் உணர்வை
உதைத்துத் தள்ளி தனிமையின்
தாக்கத்தை தவமாக்கி
சேவை செய்திடலாம் சேவடி பற்றி
பற்றியது யாவும் பழிக்கும் பற்றாம்
பற்றற்றான் பற்றினை
பற்றுவதுவே பரமபத சேவையாம்

Wednesday, January 16, 2008

மெய்வழி

தொலைத்து விட்டோமென அழுதது மனது
அழுகையின் பயனாய் விரிந்தது உறவு
உறவின் உயர்வில் ஒளிர்ந்தது உள்ளம்
உள்ளத்து ஒளியில் கரைந்தது கள்ளம்

கரைந்தது காண களித்தது நெஞ்சம்
நெஞ்சம் நிறைவால் கனிந்தது காதல்
காதலின் நன்மை காலம் பேசும்
பேசும் பதம் பெற்றது மெய்யினால்

மெய்யென்றால் அது மேதையின் திருமேனி
மேதையின் மேன்மை அவதார மகிமை
குருவாய், உருவாய், குருஜியாய் மீண்டும்
அவத்தை தாங்கி ஆண்டவர்கள் அவதரித்தார்

மலைப்பின் மாண்பு மெய்யாய் வந்தது
வசை பாடும் வகை தவிர்த்து வசந்தத்தின்
வகையினை வார்த்தையில் வடித்தது
வல்வகை வள்ளலால் வந்தது இச் சிறப்பு

வாங்கிய வார்த்தைகொண்டு வளர்ந்தது ஒரு கல்
வாயத்தது பெறும்பேறு பெற்றது புது வடிவம்
பெற்ற பேறும் பெரும்பயனும் பேராமல் தங்கிட
இன்னும் பொருத்துக புதுமை புவியோருக்காய்

பொங்கல் நன்னாளில் புகலிடம் தேடி
வந்த உயிர் அனைத்திற்கும் வாரிவழங்கிய
போதனையால் பொங்கியது ஆசியும் அருளும்
அண்டிவந்தோருக்கு அனைத்தும் அருளிய

சிவமும் அதுவே சக்தியும் அதுவே
தொலைத்து விட்ட மெய்வழியை
தொடர்ந்து வந்து தொடரவைத்த
சத்தியமும் அதுவே சாயுச்யமும் அதுவே

சூடு

சூடு

மண்ணைக் கல்லாக்கும்
கல்லைக் கரைய வைக்கும்.
ஆக்கும் அழிக்கும் சிவனின் சூடு

மனிதச் சூட்டின் வினை ஜனனம்.
ஜனனத்தின் தன்மை மயக்கம்
சூடு மறைந்த உடம்பு சுடுகாட்டுச் சொத்து

வினைக்கு வினையாய் விளைவது சூடு
காலத்தைக் கணித்ததும் சூடு
இருளைத் தகர்த்ததும் சூடு

சூட்டினால் பெற்ற சுகங்கள்
இருட்டினை நீக்கிய வரங்கள்
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு

மனிதனாகாவிட்டா மரணமெனும் சூடு
சட்டி சுட்டதும் கை விட்டதும்
காலமிட்ட சூது அநத்க் கயவனின் சூடு

காலனின் சூட்டை கவனப்பார் யாருமிலர்
காலனை வென்ற கணவனின் சூட்டினை
கருத்தாய்ப் பெற்றால் சூடும் சுகமே

குளிர்காய்வதும் சூட்டினிலே
பற்றியெறிவதும் சூட்டினிலே
பற்றியது எல்லாம் பாழே

சூடிட்டது சுயம்புவின் சூட்சுமம்
சுயம்புவின் சூடு ஞானத்தின் வீடு.
சூடில்லா உடம்பு சூன்யித்தில் துரும்பு

உள்ளத்தில் சூடு ஞானமாக்கும்
வார்த்தையில் சூடு உறவைக் கெடுக்கும்
உதட்டின் சூடு உயிரை இணைக்கும்.

இயக்கத்திற்கு மூலம் சூடு.
இயங்கானிலையிலும் சூடு.
இல்லாமை ஆக்குவது சூடு.

உயிரை உறவை உடம்மை தீய்ப்பது சூடு
ஆக்க வந்த சூடு அழித்தது அம்பலத்தே
சுத்தத்தின் ரூபம் சுகிர்தத்தின் சூடு

வெறுமையின் சூடு வெட்டவெளியாக்கும்
நன்மையான சூடு ஞானத்தின் திறவுகோல்
இதனமான சூடு இதயத்திற்குத் தேவைதான்.

பதமான சூட்டால் பரமபதம் கிட்டும்
அது வள்ளலில் வாய்மையால்
வாய்த்தோருக்கு வாய்க்கும்

வாயிலிட்ட சூட்டினால்
வார்த்தை விளக்கானது வார்த்தையெனும்
விளக்கால் வசமானது வீடு

சூடு நன்மையா தீமையா?!!!

Sunday, January 13, 2008

குருகுல நாயகி கோதறுக்கும் வல்லி

ஜீவாவி உண்ணுதற்கே சீர்மலர் மணம் படைத்தான்
மணம் உள்ள ரோஜாவில் முள்ளையும் வைத்தான்
முள்ளில்லா ரோஜாவானால் மூவரும் முகர்வரே
முகர்தலில் முதன்மை கற்றாரைக் காமுறுவது

அவ காமம் தவிர்த்து சிவ காமம் ஆக்கினால்
காமமும் ரஞ்சிதமாம் அது மனதிடை ரஞ்சிதமாம்
ஊனொளி குறைத்து உள்ளொளி பெருக்க அது
ஏகாந்தவைப்பி்ன் இரு நிலை காட்டும்

இரு நிலை வாழ்ந்த இமயவன் கண் காதலாகிக்
கசிந்தால் காலமெலாம் வாழலாமே
கற்புநெறியும் இதுவாம் களவு நெறியும் இதுவாம்
தவத்திடை நெருங்க தனைத்தான் காதல் கொள்ளும்

அவத்திடை நெருங்க அவலத்தை அணைக்கும்
அன்னையாம் அருந்ததி அருகிருந்து அணைப்பாள்
அவள் செங்கமலக் கொங்கையால் தமிழ்ப்பால் கொடுப்பாள்
சாவாவரம் தருவாள் அவள் சகலத்தையும் அறிவாள்

அன்னையவள் அமுதமொழி அனைவருக்கும் ஆக
ரஞ்சிதமாம் மனோ ரஞ்சிதமாம் மாமாலம்
செய்திடுமாம் மக்கள் இதை அறிவரோ
மாதவங்கள் புரிந்தவர்க்கே தன்னில் பாதி தந்திடுவாள்

சங்கையவள் என்றும் பதினாறு வயது பத்தினி
பாத்திரமாய் ஆவோர்க்கு பதினாறும் தருவாள்
சாத்திரங்கள் வேண்டாமே சமயங்கள் வேண்டாமே
சாதகமாய் நின்றால் சகலமும் தருவாள்

அவள் அங்கயற்கண்ணி அமுத மொழி வல்லி
குருகுல நாயகி அவள் கோதறுந்த கொடையாள்
கொற்றவனும் நற்றவனும் கோமானும்
கொண்டவிடம் முடிவில் கொள்ளையிடமாமே

கோதறுந்த கொடையாள் கொடிபற்றி நின்றால்
கோடான கோடி வரம் நமக்குத் தருவாள்
குற்றமிலாப் பெருவாழ்வு குவலயத்தோர்க்கு
குறைவில்லா நிறைவாய் குணத்தோடு கொடுப்பாள்