Sunday, January 13, 2008

குருகுல நாயகி கோதறுக்கும் வல்லி

ஜீவாவி உண்ணுதற்கே சீர்மலர் மணம் படைத்தான்
மணம் உள்ள ரோஜாவில் முள்ளையும் வைத்தான்
முள்ளில்லா ரோஜாவானால் மூவரும் முகர்வரே
முகர்தலில் முதன்மை கற்றாரைக் காமுறுவது

அவ காமம் தவிர்த்து சிவ காமம் ஆக்கினால்
காமமும் ரஞ்சிதமாம் அது மனதிடை ரஞ்சிதமாம்
ஊனொளி குறைத்து உள்ளொளி பெருக்க அது
ஏகாந்தவைப்பி்ன் இரு நிலை காட்டும்

இரு நிலை வாழ்ந்த இமயவன் கண் காதலாகிக்
கசிந்தால் காலமெலாம் வாழலாமே
கற்புநெறியும் இதுவாம் களவு நெறியும் இதுவாம்
தவத்திடை நெருங்க தனைத்தான் காதல் கொள்ளும்

அவத்திடை நெருங்க அவலத்தை அணைக்கும்
அன்னையாம் அருந்ததி அருகிருந்து அணைப்பாள்
அவள் செங்கமலக் கொங்கையால் தமிழ்ப்பால் கொடுப்பாள்
சாவாவரம் தருவாள் அவள் சகலத்தையும் அறிவாள்

அன்னையவள் அமுதமொழி அனைவருக்கும் ஆக
ரஞ்சிதமாம் மனோ ரஞ்சிதமாம் மாமாலம்
செய்திடுமாம் மக்கள் இதை அறிவரோ
மாதவங்கள் புரிந்தவர்க்கே தன்னில் பாதி தந்திடுவாள்

சங்கையவள் என்றும் பதினாறு வயது பத்தினி
பாத்திரமாய் ஆவோர்க்கு பதினாறும் தருவாள்
சாத்திரங்கள் வேண்டாமே சமயங்கள் வேண்டாமே
சாதகமாய் நின்றால் சகலமும் தருவாள்

அவள் அங்கயற்கண்ணி அமுத மொழி வல்லி
குருகுல நாயகி அவள் கோதறுந்த கொடையாள்
கொற்றவனும் நற்றவனும் கோமானும்
கொண்டவிடம் முடிவில் கொள்ளையிடமாமே

கோதறுந்த கொடையாள் கொடிபற்றி நின்றால்
கோடான கோடி வரம் நமக்குத் தருவாள்
குற்றமிலாப் பெருவாழ்வு குவலயத்தோர்க்கு
குறைவில்லா நிறைவாய் குணத்தோடு கொடுப்பாள்

No comments: