Monday, February 25, 2008

தீ

வாழ்க்கையின் உயரிய தத்துவம் தீ.

தீக்கு இரையாகவிருக்கும் ஈரவிறகுதானே நாமெல்லோரும். இதுதானே சத்தியம். உயிரெனும் தீ உறங்கிவிட்டால், உற்றார் ஏது உறவேது. இரண்டறக் கலத்தல் தீயில்தானே. அறுதல் என்பதே இல்லையே.

அக்கினியின் கருணை பாவத்தின் சுவடைக் கூட இல்லாமையாக்கிவிடுமே. நாணுமே அக்கினி இந்த நயவஞ்சக மானுடத்தைக் கண்டு.

ஞானத்தின் திறவுகோல் தீ தானே.

அது இடும் நடனத்தை ரசிக்க நல்ல மனம் வேண்டும். தீயை நேசித்த போது, நிலையாமையின் நிதர்சனம் நிஜமாய்த் தெரியும்.

பெண்கள் பணி செய்து குடும்பத்தைக் காக்க தீயைச் சுமந்து பவனி வரும் காலமிது.

ஏனிந்த உழைப்பு, என்ன அடையப் போகிறோம். தீ உணர்த்தும் தீஸிஸ்.

உழைப்பின் உக்கிரம் அக்கினியின் சாயல்.

உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தாய்மை.

எங்கே போகிறோம் நாம்.

நட்பு

நட்புக்கு நல்ல இலக்கணம் நம்பிக்கை. எதிர்பாலில் மட்டும் ஈர்ப்பு இருந்தால் அது நல்ல நட்பாக இருக்க முடியாது.

எனக்கு ஒரு நண்பன் உண்டு. உண்டு உறங்கி ஒன்றாக வாழ்ந்து, ஏழை பணக்கார வித்தியாசமின்றி இருந்த காலங்கள். ஒரே ஒரு பாலம்தான். அதன் பெயர் பரஸ்பர நம்பிக்கை. என்னை நம்பி சகலத்தையும் ஒப்படைத்த அவனுக்கு சில பழக்க வழக்கங்களால் என்னைத் தவிர்த்து தள்ளிப் போக வைத்தது.

காதலை உருகி உருகி எழுதும் பல பேருடைய தவிப்பை ஒரு நல்ல நண்பனை விட்டுப் பிரிந்திருக்கும் அனுபவத்தால் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். காதலியிடம் கூடப் பெறமுடியாத அன்பு நல்ல நண்பர்களிடையே ஏற்பட வாய்ப்பு உண்டு.

காதலியிடம் வைக்கும் அன்பு தூய்மை சார்ந்தது அல்ல. வெற்றி பெற்ற காதலுக்கு முடிவு உண்டு. அதுதான் திருமணம். பின் கலவி. அங்கே காதல் என்பது முடிவுக்கு வருகிறது.

புதிய உறவு மனைவி என்று மாறுகிறது.

ஆனால் நல்ல நண்பர்களின் நட்பு வார்த்தைக்குக் கொண்டுவர முடியாத இனிமைகளின் தொகுப்பு.

தூய்மையின் உருவை காதலியைத் தாண்டி நண்பர்களிடம் காணமுடியும்.

சிறப்புக்குடைய எழு பிறப்பு எனும் ஏழாம் பிறப்பு

மனிதன் நிச்சயமாகச் சிறப்புக்குடையவன்தான்

தன் பெருமை அறியாத மயக்கம்தான் அவனை மிருக குணத்தில் ஆக்கியுள்ளது. இறை குணம் தன்னைக் காட்டாது . அதைத் தேடி அடைய வேண்டியது ஒவ்வொரு மனுவுக்கும் கடமையாயுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு.

எழுபிறப்பும் ஏமாப்புடைத்து என்பது வள்ளுவம் வகுத்தவழி.

ஏழாம் பிறப்பு ஒன்றை மனிதன் அடையவேண்டும்.

அது இறந்து இறந்து பிறக்கும் புது பிறப்பு அல்ல.

பிறக்கும் போது சவமாகத்தானே வந்தோம். கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு அனைத்தும் கொண்டிருந்தாலும் உயிரற்ற பொருளாய் வந்தோம்.

முதற்பிறப்பு பிறந்தது சவம் எனவே பிர+சவம் என்ற பேராயிற்று.

அறிவு கொண்டோம். இரண்டாம் பிறப்டைந்தோம்.

கண், காது, மூக்கு, வாய், உணர்வு அனைத்தும் உயிர் பெற்று மனிதனாகத் தகுதியடைந்தோம்,

மூன்றாம் பிறப்பு அன்னையை அறிந்தோம் அவள் தரும் பாலுக்காக. அவளாள் அனைத்து சுற்றம் அறிந்தோம்,

நான்காம் பிறப்பு மிட்டாய்க்கு மட்டும் ஆசைப்படும் தீனிப் பிறப்பு, செல்வங்கள் அனைத்தும் இருந்தாலும் அதன் மதிப்பு அறியாது மிட்டாய் இனிப்புதான் உலகத்தின் அதிசிறந்த பொருள் என்ற மாயையில் காசு வேண்டுமா, மிட்டாய் வேண்டுமா என்றால் மிட்டாயைத் தேடும் அறிவில் இருந்தோம்,

ஐந்தாம் பிறப்பு காசைத் தேடிக் கொண்டால் இனிப்பு சாம்ராஜ்யத்தையே தனதாக்கிக் கொள்ளலாம் என்று மிட்டாயை விட்டு பொருள் தேடும் முகத்தான் கல்வி கேள்வியில் பிறந்தோம்.

ஆறாம் பிறப்பால் நன்மை தீமை அறிந்து பொருள் தேடும் வழியில் தடைகளை நீக்கிக் கொள்ள எந்தத் தவறையும் செய்யும் பகுத்தறிவின் பிறப்பை பாழுக்கு ஆக்கிக் கொள்ளும் ஒரு பிறப்பைப் பெற்றோம். இதோடு நின்று விட்டது மனிதப் பிறப்பு.

ஏழ் பிறப்பென்பது செத்து செத்து பிறப்பது அல்ல. தேகத்திலேயே ஒவ்வொரு முறையும் புதுப்பிறப்பாக கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் புதிய தேகத்தை அடைந்து இதோ ஆறு பிறப்பை அடைந்து மனிதனானோம். ஆனால் மனிதன்தான். அதற்குரிய செயல்தான் செய்கிறோமா என்றால் இல்லை. நிச்சயமாக இல்லை. மிருகத்தைவிட கேவலமான பல ரூபங்களை எடுக்கும் வல்லமையைக் கொண்டோம்.

ஏழாம் பிறப்பு ஒன்று பாக்கியிருக்கிறது. அது தேவனாகப் பிறப்பது. மனிதன் இறைவனாக ரூபம் கொள்ளும் ஒரு அதிசயப் பிறப்பு அது. இறைவன் எங்கோ ஆகாசத்தில் இல்லை. நாமே இறைவன். அதை அறியமட்டும் நம்மால் முடியவில்லை. இது சாபமா ? வரமா ?

முடிவு அவரவர் கையில்.

ஆன்மநேய ஒருமைப் பாடு

ஆன்மாவையே இன்னதென்று அறியாத நாம் அதன் ஒருமைப்பாடை எப்படிக் கொண்டு வர முடியும்?

உயிர் வளர்க்கும் உபாயத்திற்கு உறுதுணையாய் இருப்பது உடலே. உடலின் ஆழத்தில் இருட்கோளத்தில் உறைந்திருக்கும் ஆன்மாவினை சுட்டிக் காட்டி இதுதான் ஆன்ம சொரூபம் என்று அறிவிக்க யாரும் இல்லாததால் மாயையின் மயக்கத்தில் வெறும் வார்த்தையளவில் நின்றுவிட்டது ஆன்மநேயம் என்பது.

ஆன்மா என்னும் அப் பரம் பொருள் அனைத்து உடலிலும் மாயையாகக் கலந்து விட்டிருப்பதில் ஆன்மாவைத் தெரியாததால்தான் உயிரின் உடல் சுயநலம் ஒன்றைமட்டும் முன்னிருத்தி இன்பத்தை நோக்கியே ஓடுகிறது.உடல் இன்பம் மாயை என்பதை ஆன்ம அறிவில் திளைத்திருக்கும் ஒரு அருட்செம்மலின் வாய்மையால் அவர்களின் பேரிரக்கத்திற்கு ஆளாகி. ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் அவ் அருட்பேராற்றலுக்கு அளித்து நிர்வாண நிலையாம் சகலத்தையும் அச் செம்மலின் பால் வைப்போமேயானால் ஆன்ம ஒளி சகல மனித உயிரில் எங்கு ஒளிந்திருக்கிறது என்பதை அறியமுடியும்.

எல்லா வேதங்களும் அதைத்தான் கூறுகிறது.

புனித விவிலியம் கொரிந்தியர் அதிகாரத்தில் "நீங்கள் உலகிற்கு வெளிச்சமாயிருங்கள்" எனவும்

மச்சம் என்னப்பெற்ற மீனின் மாம்சமும் மற்றும் ஏனைய பிற உயிர்களின் மாம்சமூம் சதையும் இரத்த்தினால் தோற்றத்தில் மனிதனுடைய மாமிசத்தைப் போல இருந்தாலும் ஒவ்வொன்றும் தனிக் குணம் கொண்டுள்ளதைப் போல ஆன்ம அறிவைப் பெற்றவர்களின் மாம்சம் என்ன வென்று அறியும்போது அழி உடலின் மாம்சத்திலிருந்து அவர்களின் சரீரம் எந்த அளவு மாறுபட்டு உன்னதத்தில் உள்ளது என்பதைக் காணலாம்.

மனித உயிரிலிலேயே இவ்வாறு இரு நிலைப் பாடு கொண்ட தோற்றம் இருக்கும்போது, மிருகங்கள் கீழான பிறப்பின் வகையில்தான் வருகிறது.ஆறு பிறவி அடைந்து மனு என்ற நிலையில் ஏழாம் பிறப்பாகிய ஒரு பிரம்மஷேட்டரின் திருமுகத்தில் அவர்கள் வாய்மையெனும் அறிவாகாரப் புதையலில் மறு பிறப்பெய்தினால் மனு என்ற நிலையிலேயே அமரனாகவும் ஆக முடியும்.

இதையே விவிலியம் "ஒருவன் ஆவியினாலும் பரிசுத்த ஜலத்தினாலுமன்றி மற்றபடி மறுபிறப்பை அடைய முடியாது" எனக் கூறி ஒவ்வொரு மனுவும் மறுபிறப்பை இந்த சரீர நிலையிலேயே அடையப் பாடுபடவேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்தப் பொதுவான மெய்யுண்மை புனித திருக்குரானிலும், பகவத் கீதையிலும் பத்தி பத்தியாகக் கூறப்பட்டிருக்கிறது.

எந்த மதம் மனிதனைக் கூறு போடச் சொன்னது? மிருக அறிவில் இருப்பதால்தான் மதத்தின் பெயரால் இவ்வேற்றுமை உலகில் நிலவுகிறது. அதுவும் மாயைதான்

மனித சரீரத்தின் ஒப்பற்ற பெருமையை பறை சாற்றி அறிவிப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் இத்தனை சாத்திரங்களும் சம்பிரதாயங்களும்.

தமிழ்த் தாய் இதில் நல்ல பங்காற்றியிருக்கிறாள்.

தோலை விழுங்கி சுளையை எறியும் அறிவற்ற பிறப்பாக இம் மானுடம் ஆனது கண்டு ஒவ்வொரு ஞானியர்களும் இரக்கத்தால் அவத்தை தாரமாக்கி அவதாரம் எடுத்து வருகிறார்கள். மனிதனின் அலட்சியப் போக்கால் இறை அவதாரங்களை சாதாரணமான மனித தோற்றமாகக் கருதிப் புறக்கணித்துவிட்டதால்தான் "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று வள்ளல் பெருமானார் போல் பல ஞானிகளும் சலிப்புற்று இவ்வுலகைத் துறந்துவிட்டனர்.

இதனால்தான் இத்தனை கேடு இந்த மனித சமுதாயத்திற்கு.

சாலைஜெயராமன்

நாயும் பன்றியும் கீழ்க் குணச் சாயல்

கேவலமான பிறப்பில் நாயும் பன்றியும் இருந்தாலும் அதையும் பைரவர் என்றும், வராகர் என்றும் தெய்வமாகக் கொண்டாடுகிறோம்,கீழான இந்த உயிரிலும் கூட இறைத்தத்துவங்கள் கோடானு கோடி உள்ளது. தன்னையும் தன் ஆற்றலையும் மறந்து இருப்பது பன்றி, யானையைவிட பலம் வாய்ந்தது. எந்த நஞ்சும் தீண்டாதது. இருப்பினும் பேடித்தனத்தின் உச்சம்தான் பன்றியின் குணம்.அதே போல் உடன் அனைத்து நிகழ்வுகளையும் மறக்கும் குணம் நாய்க்கு உண்டு. எஜமான விசுவாசம் போன்ற அதீத குணங்கள் இருந்தாலும் பிறப்பில் ஒரு இழிநிலையான உயிரினம்தான் இந்த மறதிக் குணம் கொண்ட நாயின் பிறப்பு.இறைவனாக வேண்டிய அத்தனை தகுதிகளும் தான் பெற்று அந்த இறையை தன்னில் அறியாமல் விண்ணிலும் மண்ணிலும் கல்லிலும் தேடும் மனிதன் தன் இயல்பை மறந்து பன்றி, நாயைப் போல வாழ்ந்து கீழான இந்த உயிரினங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.இதை இவனுக்கு அறிவவுறித்தி நல்வழிப் படுத்துவதற்காக இறைவன் ஒரு அவதாரமே எடுக்க வேண்டியதாயிற்று. புராணத்தில் நாய் பன்றி இரண்டுக்கும் அவதார மகிமை உண்டு.

Sunday, February 17, 2008

கிளர்ச்சி

கிள்ளி வருமா கிளர்ச்சிகள்
உணர்வுகளைக் கிள்ள
உவகையான வார்த்தை போதும்
உண்மை கிள்ளப்பட
உயிரத் தெழும் போராடும் குணம்
எதைக் கிள்ளினால்
துன்பம் தொலையும்
உடலைக் கிள்ளாது
உணர்ச்சியைத் தூண்டும்
உபாயம் அறிந்தோரே
உண்மையில் ஒலிவாக்கள்
ஒலிவாமலையொன்று
உடம்பினில் உண்டு அங்கே
பாரிஜாதமும் செண்பகமும்
கிள்ளிக் கொள்ளும் பக்குவமாய்
ஒன்றையொன்றுகிள்ளியே
காட்டும்பரமனின் நல்லடியை
பக்தியால் என்றும்
பரவசம் கொள்ள

Tuesday, February 12, 2008

முதலும் முடிவும்

முதலும் முடிவும்
மூலவனின் கையில்
முடிவைத் தேடி
முதலை இழந்தோம்
ஆக்கிய முதலை
ஆணவம் அழிக்க
மானம் இழந்தனிலை
மனிதப்பிறப்பினுக்கு
படிகள் கடந்து
பகலவன் முகத்தில்
பளிச்சென்று நின்றால்
இழந்த முதலும்
ஈடுகட்டி இல்லம் வரும்
மூலவனும்
முகம் பார்த்து
முக்தியெனும் முதலை
மும்முறை ஈவான்
கேடு கெட்ட
இப்பிறப்பின்
பாடுகள் பலவும்
பாவம் என்பது
பகல்போல் தெரியும்
கோடிகண்ட
கோமானின்
கோதறு அமுதத்தால்
முதலும் வட்டியும்
முழுதாய்ப் பெறலாம்

Sunday, February 10, 2008

குரு வணக்கம்

குருவின் மகிமை
கூவி அழைப்போர்க்கு
குவியும் புண்ணியம்
குவலயத்தில் கோடி
எண்ணும் எழுத்தும்
அறிவித்த எம்பிரான்
ஏகமும் அவனே
ஆகமமும் அவனே
இல்லாமை அவனே
எல்லாமும் அவனே
அணுவும் அவனே
அண்ட பிண்டமும் அவனே
அருள்நிறை வாக்கினை
அவனிக்கு அளித்து
அருங்களைப்பாற்றிய
அண்ணலே சற்குருவே
நிந்தன் பொற்கழல் போற்றி

Friday, February 8, 2008

சூளுரை

நொறுங்குகையில் நுடமாகிவிடுவோம்
இரும்பான மனம் கொண்டு
எதனையும் எதிர் கொள்வோம்
சிங்கமெனச் சீறி சிறு நரிக்
கூட்டங்களை சிந்தையில் அகற்றுவோம்
சிறப்பான செயலாலும்
சீரிய நெறிகளாலும்
சிறு அரும்புக் கூட்டங்களை
சிற்றினம் சேரா
சிகரத்தில் ஏற்றுவோம்
உரம் கொண்ட உள்ளத்தால்
உயர்த்துவோம் நம் பெருமை
உறவை உலுக்கும்
ஊன அறிவு குற்றங்களைக்
குணத்தாலே விலக்கி
கொள்கைக்கு குரல் கொடுப்போம்

Tuesday, February 5, 2008

விண்கலம்

விண்ணளாவிப் பறக்கலாம்
விண்கலங்கள் தேவையில்லை
தன்னில் ஒரு நிலவு
தனியாய் இருக்கிறது
வெளியில் பறக்க
வினைகளைச் சோ்க்கிறோம்
உள்ளுன் நிலவு
உவகையூட்டும் உணர்வு
அண்டம் என்பதும்
ஆகாசம் என்பதும்
அவனியில் அகத்துள்ளே
அமைதியாய்ப் பறப்பதற்கு
விண்கலங்கள் தேவையில்லை
வித்தகம் என்னும் விபரம் வேணும்
மனம் என்னும்
மாயக்குதிரை
மார்க்கத்தை மாயமாக்கும்
கவனக் குளிகையாம்
கார்மேகக் குதிரையில்
கருத்தாய் கலக்க
விண்கலத்துக்கு ஒப்ப
விரைவாய்ப் பயணிக்கலாமே

Monday, February 4, 2008

நாரணன் நாமம்

நாவினால் சுடுவது
நாற்காரண ராஜ நிலை
நாதாங்கி நீக்கி
நடுநின்ற பொருளை
நாமம் விளித்து
நன்மாறம் கூற
திரண்டுவரும் நீதமது
தீங்கில்லா வெண்ணையாம்
நவநீதம் என்பதும்
நல்ல கதி என்பதும்
நாரணனின் நாமமே
வெண்தாளை வேக வைத்து
சுடாத தீயை
சுகமுடனே சுகித்திருக்க
சூட்சுமத்தின் சூத்திரத்தை
சூரியனுக்கு அர்ப்பணித்தால்
தீபார்த்த முத்தை
தீங்கிலாமல் காணலாமே

Friday, February 1, 2008

மனிதன்

நாயின் குணம் நாவிலே
நரியின் குணம் நினைவிலே
பாம்பின் குணம் பல்லிலே
பசுவின் குணம் பாலிலே
படைப்பின் பல குணங்களும்
பாடம் ஏதும் கொள்ளாமல்
பக்குவமாய் பற்றியது
பாவம் இந்த மனுவிற்கு
பாதி மதி சூடிநி்ற்கும்
பரம சிவன் குணமும்
பாற்கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் குணமும்
பாழ்பட்ட மனிதனுக்கு
பல நாளும் தெரியலே
எத்தனையோ இறைகுணங்கள்
ஏராளமாய் இருந்தும்
மனிதன் என்னும் மிருகத்துக்கு
இவை அனைத்தும் இன்னமும்
இருட்டில்தானே மறைந்திருக்கு
எடுத்தயிம்ப இறைவனும்
இரக்கத்தோடு வந்தால்கூட
இகழ்ந்து விரட்டும் இயல்புதான்
இவன் கொண்ட இழிகுணம்
கூறிவந்த குற்றமெல்லாம்
மிருகத்தின் குணங்களாம்
மனிதனுக்கு என்ன குணம்
மறந்தும் கூட தெரியலே
மறைந்திருக்கும் மனிதகுணம்
மறையோன் மட்டும் அறிவானோ
எண்குணத்தான் என்பதெல்லாம்
இறைவனுடைய இயற்பெயேர
இறைவனின் குணம்
இன்னதென்று அறிந்துவிட்டால்
இந்நிலத்தில் நீயே
இறையென்று அறியலாம்
குற்றமற்ற குணம் கொண்டு
கொற்றவனாய் வாழலாம்

காதல்

காலம் நீண்டதொரு பயணம்
இதில்கண்ணிமைக்கும் நேரம்
காதல்வய வாழ்வு
காட்சிகளி்ன் கோலங்கள்
கருக்கலைப்பு நாடகம்
காதலுக்கு கைம்மாறு
காதெலென்னும் சித்தாந்தம்
கண்ணைக் குருடாக்கும்
காதலிக்க கடல்போல்
கருத்துக்கள் பல உண்டு
எதிர்மறைப் பாலின்
ஏக்கத்தைவிட்டு ஏறி வர
இன்னும் எத்தனையே இன்பங்கள்
இந்நிலத்தில் உண்டு
இல்லாத காதலை
எடுத்து எறிந்து விட்டால்
இன்மையில் எல்லாம்
நன்மைதானே