Monday, February 25, 2008

ஆன்மநேய ஒருமைப் பாடு

ஆன்மாவையே இன்னதென்று அறியாத நாம் அதன் ஒருமைப்பாடை எப்படிக் கொண்டு வர முடியும்?

உயிர் வளர்க்கும் உபாயத்திற்கு உறுதுணையாய் இருப்பது உடலே. உடலின் ஆழத்தில் இருட்கோளத்தில் உறைந்திருக்கும் ஆன்மாவினை சுட்டிக் காட்டி இதுதான் ஆன்ம சொரூபம் என்று அறிவிக்க யாரும் இல்லாததால் மாயையின் மயக்கத்தில் வெறும் வார்த்தையளவில் நின்றுவிட்டது ஆன்மநேயம் என்பது.

ஆன்மா என்னும் அப் பரம் பொருள் அனைத்து உடலிலும் மாயையாகக் கலந்து விட்டிருப்பதில் ஆன்மாவைத் தெரியாததால்தான் உயிரின் உடல் சுயநலம் ஒன்றைமட்டும் முன்னிருத்தி இன்பத்தை நோக்கியே ஓடுகிறது.உடல் இன்பம் மாயை என்பதை ஆன்ம அறிவில் திளைத்திருக்கும் ஒரு அருட்செம்மலின் வாய்மையால் அவர்களின் பேரிரக்கத்திற்கு ஆளாகி. ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் அவ் அருட்பேராற்றலுக்கு அளித்து நிர்வாண நிலையாம் சகலத்தையும் அச் செம்மலின் பால் வைப்போமேயானால் ஆன்ம ஒளி சகல மனித உயிரில் எங்கு ஒளிந்திருக்கிறது என்பதை அறியமுடியும்.

எல்லா வேதங்களும் அதைத்தான் கூறுகிறது.

புனித விவிலியம் கொரிந்தியர் அதிகாரத்தில் "நீங்கள் உலகிற்கு வெளிச்சமாயிருங்கள்" எனவும்

மச்சம் என்னப்பெற்ற மீனின் மாம்சமும் மற்றும் ஏனைய பிற உயிர்களின் மாம்சமூம் சதையும் இரத்த்தினால் தோற்றத்தில் மனிதனுடைய மாமிசத்தைப் போல இருந்தாலும் ஒவ்வொன்றும் தனிக் குணம் கொண்டுள்ளதைப் போல ஆன்ம அறிவைப் பெற்றவர்களின் மாம்சம் என்ன வென்று அறியும்போது அழி உடலின் மாம்சத்திலிருந்து அவர்களின் சரீரம் எந்த அளவு மாறுபட்டு உன்னதத்தில் உள்ளது என்பதைக் காணலாம்.

மனித உயிரிலிலேயே இவ்வாறு இரு நிலைப் பாடு கொண்ட தோற்றம் இருக்கும்போது, மிருகங்கள் கீழான பிறப்பின் வகையில்தான் வருகிறது.ஆறு பிறவி அடைந்து மனு என்ற நிலையில் ஏழாம் பிறப்பாகிய ஒரு பிரம்மஷேட்டரின் திருமுகத்தில் அவர்கள் வாய்மையெனும் அறிவாகாரப் புதையலில் மறு பிறப்பெய்தினால் மனு என்ற நிலையிலேயே அமரனாகவும் ஆக முடியும்.

இதையே விவிலியம் "ஒருவன் ஆவியினாலும் பரிசுத்த ஜலத்தினாலுமன்றி மற்றபடி மறுபிறப்பை அடைய முடியாது" எனக் கூறி ஒவ்வொரு மனுவும் மறுபிறப்பை இந்த சரீர நிலையிலேயே அடையப் பாடுபடவேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்தப் பொதுவான மெய்யுண்மை புனித திருக்குரானிலும், பகவத் கீதையிலும் பத்தி பத்தியாகக் கூறப்பட்டிருக்கிறது.

எந்த மதம் மனிதனைக் கூறு போடச் சொன்னது? மிருக அறிவில் இருப்பதால்தான் மதத்தின் பெயரால் இவ்வேற்றுமை உலகில் நிலவுகிறது. அதுவும் மாயைதான்

மனித சரீரத்தின் ஒப்பற்ற பெருமையை பறை சாற்றி அறிவிப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் இத்தனை சாத்திரங்களும் சம்பிரதாயங்களும்.

தமிழ்த் தாய் இதில் நல்ல பங்காற்றியிருக்கிறாள்.

தோலை விழுங்கி சுளையை எறியும் அறிவற்ற பிறப்பாக இம் மானுடம் ஆனது கண்டு ஒவ்வொரு ஞானியர்களும் இரக்கத்தால் அவத்தை தாரமாக்கி அவதாரம் எடுத்து வருகிறார்கள். மனிதனின் அலட்சியப் போக்கால் இறை அவதாரங்களை சாதாரணமான மனித தோற்றமாகக் கருதிப் புறக்கணித்துவிட்டதால்தான் "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று வள்ளல் பெருமானார் போல் பல ஞானிகளும் சலிப்புற்று இவ்வுலகைத் துறந்துவிட்டனர்.

இதனால்தான் இத்தனை கேடு இந்த மனித சமுதாயத்திற்கு.

சாலைஜெயராமன்

No comments: