Monday, April 7, 2008

இயேசு மீண்டும் வருவார்

ஒப்பற்ற உலக மகாத்மாக்கள் உலா வரும்போது உதாசீனம்தான் அவர்கள் கண்டது. ஏனெனில் மனத்தின் மாசுகளால் நாம் எதிர்பார்க்கும், கற்பனை செய்து வைத்திருக்கும் கதாபாத்திரத் தோற்றத்தில் மகான்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. நம் எண்ணத்தில் வடித்து வைத்த கற்பனையான உருவங்களைக் கண்டாலும் நாம் அவர்களை ஏற்கப் போவதில்லை. அறிவின் முழு முயற்சியே நம்மைச் சுற்றியுள்ள நன்மையை அறிந்து கொள்வதுதானே. நம்மிடமே உலாவி இருக்கும் பெரியோர்களை நாம் எப்போதும் அறிந்து கொள்வதில்லை. அவர்கள் மறைவுக்குப் பின்தான் போற்றிப் புகழுகிறோம். இதுவும் ஒரு அறியாமையே,உதாரணமாக ஒரு குளத்தில் உள்ள தாமரைக்கு அதிகச் சொந்தம் அதில் அதனோடு வாழும் மீன்களும் தவளைகளுமே. ஓடி விளையாடி தாமரை பூத்ததிலிருந்து அதிக நெருக்கத்துடன் உள்ள இந்த ஜீவன்களுக்கு தாமரையின் உள்ளே இருக்கும் தேனின் சுவை தெரியாது. காலமெல்லாம் அதனோடு புரண்டு புழங்கி இருந்தாலும் அறிந்து கொள்ளாத அந்த ஜீவனக்ள் அறியாமையின் அடையாளங்கள். ஆனால் தாமரை முதிர்ந்து பூத்துக் குலுங்கி Divine Nector ஆகிய தேனை சூலில் சுமந்து இருக்கும் குணம் கண்டு எங்கோ பிறந்து வளர்ந்த தேனிக்கள் தான் அதைப் பெறுவதற்கு தகுதியாகிறது. என்னதான் தவளையும், மீனும் தாமரைக்கு சொந்தம் கொண்டாடினாலும் முடிவு பலனான தேன் என்னவோ அறிவுடைய தேனீக்களுக்குத்தான்.நுண்ணிய நுண்ணறிவு கொண்டு நோக்கும்கால் நம்மிடையே புழக்கத்திலிருக்கும் பெரியோர்களை அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் தேனின் சுவையை பெறத் தகுதியுடையோர்கள்தான் உண்மையான அறிவாளிகள். மற்ற உலகப் படிப்பாலும், பொருளாதாய வெற்றியாலும் அறிஞர்களை உதாசீனப்படுத்துபவர்கள் தவளைக்கும் மீனுக்கும் ஒப்பானவர்களே. உதாரணமாக கிருஷ்ண பரமாத்மாவே நேரில் குண்டத்தோடும் மயில் இறகு வைத்த கிரீடத்தோடும், கையில் குழலோடும் இன்று நேரில் வந்தால் நிச்சயம் நகைப்புக்கும் கேலிக்கும் ஆளாகி வெருண்டு அவரை அதிகமாக கோவில்களில் தேடும் ஹிந்துப் பெருமக்களால் ஓடவைக்கப்படுவார். இயேசுநாதர் இன்று வந்தால் அவரிடம் அற்புதங்களை எதிர் பார்த்து சொந்தம் கொண்டாடும் அனைத்து மக்களாலும் சாத்தியமே அற்ற செயல் படுத்தமுடியாத அதிசயங்களை எதிர்பார்த்து அவரைப் புறக்கணிப்பார்கள். ஆனால் இயேசு பிரான் தனது இரண்டாம் வருகையை உலகத்திற்கு அறிவித்து இருக்கிறார். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற வேத வசனம் நிறைவேற வேண்டுமானால், அவரிடம் அதிசயங்களை எதிர்பார்ப்பதை விட்டு அன்று காட்டிய அந்த மனித நேயமும் அன்பையும் நம்மிடையே தேடினால் அவர் நிச்சியம் கண்ணில் படுவார். ஏனெனில் அவர் மரணிப்பதுமில்லை மறைவதும் இல்லை. நித்திய ஜீவனான அறிவாகரப் புதையலிலே அவர் என்றும் மறைந்து வாழ்வளித்துக் கொண்டிருக்கிறார்.கிருஷ்ணன் என்பதும் கிருஸ்து என்பதும் ஒரு ஒப்பற்ற உயிர் ஆற்றல்.மனத்துக்கண் மாசற்ற ஒரு நிலையை உருவகமாக்கப் பெற்ற ஒரு குணத்தின் பிரதிபலிப்பு. அக் குணங்கள் வாய்க்கப் பெற்றால் நாமே ஒரு கிருஷ்ணன்தானே, கிறிஸ்துதானே. கிருஷ்ணனாக அரிதாரம் மட்டும் பூசாமல் அவர்களுடைய ஒப்பற்ற குணங்களைக் கைக் கொள்ளும்போது மனிதனே இறைவனாகிறான்.அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்நாம் பிறந்தபோது குற்றம் குறையற்ற இறைநிலையுடன் கூடிய அறமாகத்தானே பிறந்தோம். அறம் என்ற பொருளோடு பிறந்த நாம் வயது ஏற ஏற மறச் செயல்களால் அறம் மறைய குணம் கெட்ட குடிமக்களானோம். அறம் என்ற போர்வையில் எந்த தான தர்மங்களும் தேவையில்லை. நம்மிடம் உள்ள மறம் என்ற தீமைகளை என்னஎன்ன என்று அறிந்து அதை நீக்கிக் கொண்டாலே பிறந்த போது இருந்த அறமாகவே மரிக்கும்போதும் இருப்போம். அவ்வாறு குற்றங்களை நீக்கிக் கொண்டவர்களே கிருஷ்ணனும், கிருஸ்துவும் மற்றும் எண்ணற்ற உலகில் தோன்றிய உத்தம உருவங்கள்.மறத்தை அறிந்து நீக்கிக் கொள்ளும் உபாயமே அறம் எனப்படுவது. அதற்கு முதலில் மனத்துக் கண் மாசிலன் ஆதல் என்ற நிலையை அடைதலே அனைத்து அறனுமாகும்.அப்படிப்பட்ட அவதார புருஷர்கள் நிச்சயம் நாம் கற்பனையாகப் பார்க்கும் உருவத்தில் உலா வரமாட்டார்கள்.புனிதர் இயேசுவை நம்மிடையே தேடுவோம்,

1 comment:

I AM naagaraa said...

அரும்பெரும் உபதேசங்களை அடுக்கித்தரும் மிகவும் பயனுள்ள கட்டுரைக்கு உமக்கு நன்றி ஐயா!

கீழ்க்காணும் மதநல்லிணக்கத்துக்கான அதிசய மாலையின் வரிகளை உம்மோடு பகிர்ந்து மகிழ்கிறேன்.

அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள குருவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள கிறிஸ்துவாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள நபிகளாக நான் என்னை அறிகிறேன். அன்னை பூமியில் நடமாடும் ஜீவனுள்ள உட்போதகராக நான் என்னை அறிகிறேன். எனவே ஞானிகள் வாயிலாகத் தான் செய்த எல்லா அதிசயங்களையும் கிரியைகளையும் என் வாயிலாகவும் கடவுளால் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். "கடவுளால் எல்லாங் கூடும்" என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே என் வாழ்வின் என் உணர்வின் அனைத்துக் களங்களிலும் கடவுளின் அதிசயம் வெளிப்பட நான் முழுமையாக அனுமதிக்கிறேன்.

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்