Sunday, January 27, 2008

பயம்

மாறாக ஓடும் மனதின் மயக்கம்
மானுடவ வாழ்வின் பயப் பரிணாமம்
மரண பயச் சவுக்குதான்
மாற்றுகின்ற மாமருந்து
பயம் என்பது வரமாகும்
பயத்துடன் பக்தி வேண்டும்
பயபக்திதான் பதியைக் காட்டும்
பயமில்லா வாழ்வு
மிருகத்தை ஒக்கும்
பயத்துடன் பொறுமை காத்தால்
பத்தியம் தேவைதானோ
பாசத்தால் விளையும் பயம்
பாதையைக் காட்டாது
பயத்தின் முடிவிடம்
பரமபத வீடு

Saturday, January 26, 2008

ஏழை

இல்லாத ஒன்றுதான் ஏழ்மையைக் காட்டும்
இருப்பவை யாவும் இறுமாப்பின் வெளிச்சம்
எல்லாம் இருந்தும் இல்லாததற்கு ஏங்கும்
இயல்பிலே ஏழையான எத்தனையோ போ்கள் உண்டு
உணவு இல்லையென்று அழுவாரும்
உணவு செரிக்கவில்லை என்று அழுவாரும்
உணவுக்காகவே உழைப்பாரும்
உணர்வில் ஏழைகளே
ஈதல் என்பதன் இலக்கணம் அறிந்தால்
இறைவனின் நிலையை அறியலாம்
ஏழையாக யாரையும் இறைவன் படைக்கவில்லை
அறிவின் நிலையறியா யாவரும்
எண்ணத்தில் ஏழைதானே

வழிகள்

வருவதில்லை வழிகள்
வந்ததும் செல்வதும் வழி வழியே அது
விதியின் வசத்தால் விளைந்ததுதானே
வழியின் வாசலில் விதியும் நுழைவதை
மதியின் வழியே மடக்கிப் பிடித்தால்
மயக்கும் விதியை மாய்க்கவும் கூடுமே

Thursday, January 24, 2008

ஞாபகம் வருதே

ஞாபகங்கள் நிறைவாவது
ஞானத்தின் நிலையாகும்
நினைப்பும் மறப்பும்
நிலையாமையின் இருப்பாகும்
அனைத்தையும் இழப்பது
அறிவுக்கு அழகாகும்
நிலையிடம் காணுவது
நீதர்கள் நிலையாகும்
இறவா னிலை அது
ஞாபகங்களின் நிறைவாகும்

பாரத மண்ணின் பெருமைமிகு மைந்தன்



சேற்றைக் கூட தின்னும் நாளும் சீக்கிரமே வந்திடுமோ
வாடி நின்ற என் வயி்ற்றின் வாட்டம் போக்க முடியலியே
சூதும் என்றும் வாதும் என்றும் ஏதேதோ சொல்லுவார்கள்
சொந்தம் யாரும் இல்லாததால் சொல்லின் அர்த்தம் புரியலே

சோறு எனக்குக் கிடைச்சாத்தான் வேறு பாஷை புரியுமே
சோறு என்ற ஒன்றுதான் சொர்க்கமாகும் இப்போது
தாயிருந்தால் அவளும் தவிக்கவிட மாட்டாளே
தாயைத் தேடி அலுத்துவிட்டு தவித்து வரும் நாளையில்

தாகம் தீர்க்கும் யாருமே தாயாய் எனக்கு ஆவாளே
என்னைப் போல எத்தனையோ ஏழைக் கூட்டம் வாடுது
எனக்கு இது புதுசுதான் இன்னும் கொஞ்சம் பழகணும்
பாதி உடம்பு பசியிலே பங்கப்பட்டு போனது

பெருமைமிகு பாரதத்தின் பாரம்பரியப் பெருமையில்
என்போல பால பரதேசிகளுக்கும் பலமான பங்கிருக்கு
பழம் பெருமை பேசுவதால் பலனொன்றும் இல்லையே
பக்குவமாய் எங்களுக்கும் பாதை ஒன்று காட்டுங்களேன்

நிறை குணம்

குறைந்துவிடும் அனைத்தும் குவலயத்தில்
குன்றாத ஒன்று குறையில்லாமல் வேண்டும்
காதலாலும் காமத்தாலும் கவிந்து நிற்கும் கடமும்
கடைசியில் ஒருநாள் காலனுக்கு உணவாகும்
காலத்தே பயிர் செய்யும் கருத்தினை அறிந்தால்
குறையையும் நிறைவாய் கொள்ளலாமே.

Sunday, January 20, 2008

அங்கயற்கண்ணி பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்


சைவக் குரவர்கள் வரிசையில் கடைக் கலியில் மக்களின் வெங்கலித் துயர் துடைப்பதற்காக அவதார மகிமை பெற்று பூர்வாசிரமத்தில் காதிர்பாட்சா என்ற திருநாமத்தோடு அவதரித்த கர்த்தாதி கர்த்தர், மகதி கல்கி என்னும் சாலை ஆண்டவர்கள் அறைந்து வைத்த சைவத் திருமந்திரமாம் "மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மத" உற்பவ உற்பன்னர், மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வளித்த எம்மான் சாலை ஆண்டவர்களின் மஹாப் மந்திரப் பிரேரணையில் சிவனிலை பற்றிய தகவல்.
அங்கமே அனைத்துமாம்
அயனே சிவமாம்
கண்ணியே அன்னையாம்
அங்கத்தில் அயர்ந்த அயனை
அடைந்த கண்ணியே அங்கயற்கண்ணி
அவள் அடைந்த சிவம்
வெளியானால் சிவம் போன
அங்கம் சவமாகும்
சைவ சித்தாந்தங்கள் ஜீவனை சிவமென்கிறன. அங்கத்தில் சிவனிலையின் இருப்பே சக்தியின் ரூபத்தில் வெளிப்படுகிறது. அச் ஜீவன் விலகினால் சக்திக்கு வேலையில்லை. சவம் என்ற பெயரெடுத்து அவவுடலைத் தாங்கி அழிந்து படுகிறது. அழியாநிலையைப் போதிப்பதுவே சைவம்.
சைவத்திருமேனி தாங்கி வரும் குருகொண்டல்களின் வாய்மை எனும் அமிர்த வர்ஷிப்பினால் அங்கத்தில் அயர்ந்திருக்கும் சிவனிலையை அறிந்து கொண்டு அழியா நித்திய உடலை ஜீவன் பெருவதுவே முக்தி நிலை என்பதுவே அண்ணல் அவர்கள் எங்களுக்கு காட்டிய அரு நெறி. அது சிவ நெறி.

இறைவனின் இன்முகம்


இறையின் இருப்பை இன்முகத்தில் காட்டும்
இனிய நிலைதானே இறைவன் தந்தது
கள்ளங்கபடில்லா இந்னிலை காலமும் கனிந்து நிற்க
வள்ளலின் வாய்மையை வணங்கி வாழ்த்துவோம்
அறத்தின் அழகை அள்ளித் தந்தான் இறைவன்
காலத்தால் இக்குணம் கலங்காமல் காக்க
காத்து நிற்போம் பதம் பணிந்து

பூமித்தாய்

மானம் கெட்ட மடந்தை அவள்
பொறுமைக்குச் சொந்தக்காரி
வாழ்வளிக்க வந்த அவள்
வானம் பார்த்து நிற்கிறாள்
ஈனம் நிறை இன்னல்களால்
இயன்றவரை இடும்பளிக்கும்
இச்சகத்து மாந்தர் தம்மை
இரும்புக் கரம் கொண்டு
இதுவரைஇன்னல் இழைக்க நினைக்காதேன்
மானம் கெட்ட மடந்தை அவள்
மங்கை நல்லாள் பூமித்தாய்

Saturday, January 19, 2008

வர்ஷிணி

வர்ஷிணி என்பது வாய்மையே
மெய்கண்ட மன்னரின் மேலான வர்ஷிப்பு
கல்வியற்ற குலத்தையும் காய்ந்து
நிற்கும் பயிரையும் உயிர்ப்பிக்கும் ஊற்று

மழை

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமோ
தாகமே இல்லையென தவறுதலாய் நினைத்துவிட்டாள்
தாகம் தீர்க்க வேண்டுமென்று தவமாய் தவித்திருந்தால்
தாவியே தான் வருவாள் தரணியெங்கும் பெய்வாள்
மோகமும் நீக்கிடுவாள் முகமும் சுழிக்கமாட்டாள்
தாகத்தோடு தேடுவோர்க்கு தமிழ்வழியே பொழிவாள்
தாகம் தீர்ந்த பேர்க்கு தவசியென்ற பெயரிடுவாள்
ஆனந்தவர்ஷிணி அமிர்தம் பொழியும் அம்மணி
அவள் கருணையென்னும் மழையால் காலமெல்லாம் காப்பாள்

பரமபதம்

செய்ய பல செய்திகள் உண்டு
செம்மையாய் செய்யும் திறம் கொணடால்
செய்திகள் சேவையாகும்
சேவையின் பலன் சோகத்தை அசோகமாக்கும்
சோகநிலை மாற்றி யோக நிலை கூட்டும்
கூடும் குறிப்பறிய கொள்கை பல உண்டு
உண்டு கொழுக்கும் உணர்வை
உதைத்துத் தள்ளி தனிமையின்
தாக்கத்தை தவமாக்கி
சேவை செய்திடலாம் சேவடி பற்றி
பற்றியது யாவும் பழிக்கும் பற்றாம்
பற்றற்றான் பற்றினை
பற்றுவதுவே பரமபத சேவையாம்

Wednesday, January 16, 2008

மெய்வழி

தொலைத்து விட்டோமென அழுதது மனது
அழுகையின் பயனாய் விரிந்தது உறவு
உறவின் உயர்வில் ஒளிர்ந்தது உள்ளம்
உள்ளத்து ஒளியில் கரைந்தது கள்ளம்

கரைந்தது காண களித்தது நெஞ்சம்
நெஞ்சம் நிறைவால் கனிந்தது காதல்
காதலின் நன்மை காலம் பேசும்
பேசும் பதம் பெற்றது மெய்யினால்

மெய்யென்றால் அது மேதையின் திருமேனி
மேதையின் மேன்மை அவதார மகிமை
குருவாய், உருவாய், குருஜியாய் மீண்டும்
அவத்தை தாங்கி ஆண்டவர்கள் அவதரித்தார்

மலைப்பின் மாண்பு மெய்யாய் வந்தது
வசை பாடும் வகை தவிர்த்து வசந்தத்தின்
வகையினை வார்த்தையில் வடித்தது
வல்வகை வள்ளலால் வந்தது இச் சிறப்பு

வாங்கிய வார்த்தைகொண்டு வளர்ந்தது ஒரு கல்
வாயத்தது பெறும்பேறு பெற்றது புது வடிவம்
பெற்ற பேறும் பெரும்பயனும் பேராமல் தங்கிட
இன்னும் பொருத்துக புதுமை புவியோருக்காய்

பொங்கல் நன்னாளில் புகலிடம் தேடி
வந்த உயிர் அனைத்திற்கும் வாரிவழங்கிய
போதனையால் பொங்கியது ஆசியும் அருளும்
அண்டிவந்தோருக்கு அனைத்தும் அருளிய

சிவமும் அதுவே சக்தியும் அதுவே
தொலைத்து விட்ட மெய்வழியை
தொடர்ந்து வந்து தொடரவைத்த
சத்தியமும் அதுவே சாயுச்யமும் அதுவே

சூடு

சூடு

மண்ணைக் கல்லாக்கும்
கல்லைக் கரைய வைக்கும்.
ஆக்கும் அழிக்கும் சிவனின் சூடு

மனிதச் சூட்டின் வினை ஜனனம்.
ஜனனத்தின் தன்மை மயக்கம்
சூடு மறைந்த உடம்பு சுடுகாட்டுச் சொத்து

வினைக்கு வினையாய் விளைவது சூடு
காலத்தைக் கணித்ததும் சூடு
இருளைத் தகர்த்ததும் சூடு

சூட்டினால் பெற்ற சுகங்கள்
இருட்டினை நீக்கிய வரங்கள்
நல்ல மாட்டிற்கு ஒரு சூடு

மனிதனாகாவிட்டா மரணமெனும் சூடு
சட்டி சுட்டதும் கை விட்டதும்
காலமிட்ட சூது அநத்க் கயவனின் சூடு

காலனின் சூட்டை கவனப்பார் யாருமிலர்
காலனை வென்ற கணவனின் சூட்டினை
கருத்தாய்ப் பெற்றால் சூடும் சுகமே

குளிர்காய்வதும் சூட்டினிலே
பற்றியெறிவதும் சூட்டினிலே
பற்றியது எல்லாம் பாழே

சூடிட்டது சுயம்புவின் சூட்சுமம்
சுயம்புவின் சூடு ஞானத்தின் வீடு.
சூடில்லா உடம்பு சூன்யித்தில் துரும்பு

உள்ளத்தில் சூடு ஞானமாக்கும்
வார்த்தையில் சூடு உறவைக் கெடுக்கும்
உதட்டின் சூடு உயிரை இணைக்கும்.

இயக்கத்திற்கு மூலம் சூடு.
இயங்கானிலையிலும் சூடு.
இல்லாமை ஆக்குவது சூடு.

உயிரை உறவை உடம்மை தீய்ப்பது சூடு
ஆக்க வந்த சூடு அழித்தது அம்பலத்தே
சுத்தத்தின் ரூபம் சுகிர்தத்தின் சூடு

வெறுமையின் சூடு வெட்டவெளியாக்கும்
நன்மையான சூடு ஞானத்தின் திறவுகோல்
இதனமான சூடு இதயத்திற்குத் தேவைதான்.

பதமான சூட்டால் பரமபதம் கிட்டும்
அது வள்ளலில் வாய்மையால்
வாய்த்தோருக்கு வாய்க்கும்

வாயிலிட்ட சூட்டினால்
வார்த்தை விளக்கானது வார்த்தையெனும்
விளக்கால் வசமானது வீடு

சூடு நன்மையா தீமையா?!!!

Sunday, January 13, 2008

குருகுல நாயகி கோதறுக்கும் வல்லி

ஜீவாவி உண்ணுதற்கே சீர்மலர் மணம் படைத்தான்
மணம் உள்ள ரோஜாவில் முள்ளையும் வைத்தான்
முள்ளில்லா ரோஜாவானால் மூவரும் முகர்வரே
முகர்தலில் முதன்மை கற்றாரைக் காமுறுவது

அவ காமம் தவிர்த்து சிவ காமம் ஆக்கினால்
காமமும் ரஞ்சிதமாம் அது மனதிடை ரஞ்சிதமாம்
ஊனொளி குறைத்து உள்ளொளி பெருக்க அது
ஏகாந்தவைப்பி்ன் இரு நிலை காட்டும்

இரு நிலை வாழ்ந்த இமயவன் கண் காதலாகிக்
கசிந்தால் காலமெலாம் வாழலாமே
கற்புநெறியும் இதுவாம் களவு நெறியும் இதுவாம்
தவத்திடை நெருங்க தனைத்தான் காதல் கொள்ளும்

அவத்திடை நெருங்க அவலத்தை அணைக்கும்
அன்னையாம் அருந்ததி அருகிருந்து அணைப்பாள்
அவள் செங்கமலக் கொங்கையால் தமிழ்ப்பால் கொடுப்பாள்
சாவாவரம் தருவாள் அவள் சகலத்தையும் அறிவாள்

அன்னையவள் அமுதமொழி அனைவருக்கும் ஆக
ரஞ்சிதமாம் மனோ ரஞ்சிதமாம் மாமாலம்
செய்திடுமாம் மக்கள் இதை அறிவரோ
மாதவங்கள் புரிந்தவர்க்கே தன்னில் பாதி தந்திடுவாள்

சங்கையவள் என்றும் பதினாறு வயது பத்தினி
பாத்திரமாய் ஆவோர்க்கு பதினாறும் தருவாள்
சாத்திரங்கள் வேண்டாமே சமயங்கள் வேண்டாமே
சாதகமாய் நின்றால் சகலமும் தருவாள்

அவள் அங்கயற்கண்ணி அமுத மொழி வல்லி
குருகுல நாயகி அவள் கோதறுந்த கொடையாள்
கொற்றவனும் நற்றவனும் கோமானும்
கொண்டவிடம் முடிவில் கொள்ளையிடமாமே

கோதறுந்த கொடையாள் கொடிபற்றி நின்றால்
கோடான கோடி வரம் நமக்குத் தருவாள்
குற்றமிலாப் பெருவாழ்வு குவலயத்தோர்க்கு
குறைவில்லா நிறைவாய் குணத்தோடு கொடுப்பாள்