Friday, February 8, 2008

சூளுரை

நொறுங்குகையில் நுடமாகிவிடுவோம்
இரும்பான மனம் கொண்டு
எதனையும் எதிர் கொள்வோம்
சிங்கமெனச் சீறி சிறு நரிக்
கூட்டங்களை சிந்தையில் அகற்றுவோம்
சிறப்பான செயலாலும்
சீரிய நெறிகளாலும்
சிறு அரும்புக் கூட்டங்களை
சிற்றினம் சேரா
சிகரத்தில் ஏற்றுவோம்
உரம் கொண்ட உள்ளத்தால்
உயர்த்துவோம் நம் பெருமை
உறவை உலுக்கும்
ஊன அறிவு குற்றங்களைக்
குணத்தாலே விலக்கி
கொள்கைக்கு குரல் கொடுப்போம்

Tuesday, February 5, 2008

விண்கலம்

விண்ணளாவிப் பறக்கலாம்
விண்கலங்கள் தேவையில்லை
தன்னில் ஒரு நிலவு
தனியாய் இருக்கிறது
வெளியில் பறக்க
வினைகளைச் சோ்க்கிறோம்
உள்ளுன் நிலவு
உவகையூட்டும் உணர்வு
அண்டம் என்பதும்
ஆகாசம் என்பதும்
அவனியில் அகத்துள்ளே
அமைதியாய்ப் பறப்பதற்கு
விண்கலங்கள் தேவையில்லை
வித்தகம் என்னும் விபரம் வேணும்
மனம் என்னும்
மாயக்குதிரை
மார்க்கத்தை மாயமாக்கும்
கவனக் குளிகையாம்
கார்மேகக் குதிரையில்
கருத்தாய் கலக்க
விண்கலத்துக்கு ஒப்ப
விரைவாய்ப் பயணிக்கலாமே

Monday, February 4, 2008

நாரணன் நாமம்

நாவினால் சுடுவது
நாற்காரண ராஜ நிலை
நாதாங்கி நீக்கி
நடுநின்ற பொருளை
நாமம் விளித்து
நன்மாறம் கூற
திரண்டுவரும் நீதமது
தீங்கில்லா வெண்ணையாம்
நவநீதம் என்பதும்
நல்ல கதி என்பதும்
நாரணனின் நாமமே
வெண்தாளை வேக வைத்து
சுடாத தீயை
சுகமுடனே சுகித்திருக்க
சூட்சுமத்தின் சூத்திரத்தை
சூரியனுக்கு அர்ப்பணித்தால்
தீபார்த்த முத்தை
தீங்கிலாமல் காணலாமே

Friday, February 1, 2008

மனிதன்

நாயின் குணம் நாவிலே
நரியின் குணம் நினைவிலே
பாம்பின் குணம் பல்லிலே
பசுவின் குணம் பாலிலே
படைப்பின் பல குணங்களும்
பாடம் ஏதும் கொள்ளாமல்
பக்குவமாய் பற்றியது
பாவம் இந்த மனுவிற்கு
பாதி மதி சூடிநி்ற்கும்
பரம சிவன் குணமும்
பாற்கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் குணமும்
பாழ்பட்ட மனிதனுக்கு
பல நாளும் தெரியலே
எத்தனையோ இறைகுணங்கள்
ஏராளமாய் இருந்தும்
மனிதன் என்னும் மிருகத்துக்கு
இவை அனைத்தும் இன்னமும்
இருட்டில்தானே மறைந்திருக்கு
எடுத்தயிம்ப இறைவனும்
இரக்கத்தோடு வந்தால்கூட
இகழ்ந்து விரட்டும் இயல்புதான்
இவன் கொண்ட இழிகுணம்
கூறிவந்த குற்றமெல்லாம்
மிருகத்தின் குணங்களாம்
மனிதனுக்கு என்ன குணம்
மறந்தும் கூட தெரியலே
மறைந்திருக்கும் மனிதகுணம்
மறையோன் மட்டும் அறிவானோ
எண்குணத்தான் என்பதெல்லாம்
இறைவனுடைய இயற்பெயேர
இறைவனின் குணம்
இன்னதென்று அறிந்துவிட்டால்
இந்நிலத்தில் நீயே
இறையென்று அறியலாம்
குற்றமற்ற குணம் கொண்டு
கொற்றவனாய் வாழலாம்

காதல்

காலம் நீண்டதொரு பயணம்
இதில்கண்ணிமைக்கும் நேரம்
காதல்வய வாழ்வு
காட்சிகளி்ன் கோலங்கள்
கருக்கலைப்பு நாடகம்
காதலுக்கு கைம்மாறு
காதெலென்னும் சித்தாந்தம்
கண்ணைக் குருடாக்கும்
காதலிக்க கடல்போல்
கருத்துக்கள் பல உண்டு
எதிர்மறைப் பாலின்
ஏக்கத்தைவிட்டு ஏறி வர
இன்னும் எத்தனையே இன்பங்கள்
இந்நிலத்தில் உண்டு
இல்லாத காதலை
எடுத்து எறிந்து விட்டால்
இன்மையில் எல்லாம்
நன்மைதானே

Sunday, January 27, 2008

பயம்

மாறாக ஓடும் மனதின் மயக்கம்
மானுடவ வாழ்வின் பயப் பரிணாமம்
மரண பயச் சவுக்குதான்
மாற்றுகின்ற மாமருந்து
பயம் என்பது வரமாகும்
பயத்துடன் பக்தி வேண்டும்
பயபக்திதான் பதியைக் காட்டும்
பயமில்லா வாழ்வு
மிருகத்தை ஒக்கும்
பயத்துடன் பொறுமை காத்தால்
பத்தியம் தேவைதானோ
பாசத்தால் விளையும் பயம்
பாதையைக் காட்டாது
பயத்தின் முடிவிடம்
பரமபத வீடு

Saturday, January 26, 2008

ஏழை

இல்லாத ஒன்றுதான் ஏழ்மையைக் காட்டும்
இருப்பவை யாவும் இறுமாப்பின் வெளிச்சம்
எல்லாம் இருந்தும் இல்லாததற்கு ஏங்கும்
இயல்பிலே ஏழையான எத்தனையோ போ்கள் உண்டு
உணவு இல்லையென்று அழுவாரும்
உணவு செரிக்கவில்லை என்று அழுவாரும்
உணவுக்காகவே உழைப்பாரும்
உணர்வில் ஏழைகளே
ஈதல் என்பதன் இலக்கணம் அறிந்தால்
இறைவனின் நிலையை அறியலாம்
ஏழையாக யாரையும் இறைவன் படைக்கவில்லை
அறிவின் நிலையறியா யாவரும்
எண்ணத்தில் ஏழைதானே

வழிகள்

வருவதில்லை வழிகள்
வந்ததும் செல்வதும் வழி வழியே அது
விதியின் வசத்தால் விளைந்ததுதானே
வழியின் வாசலில் விதியும் நுழைவதை
மதியின் வழியே மடக்கிப் பிடித்தால்
மயக்கும் விதியை மாய்க்கவும் கூடுமே

Thursday, January 24, 2008

ஞாபகம் வருதே

ஞாபகங்கள் நிறைவாவது
ஞானத்தின் நிலையாகும்
நினைப்பும் மறப்பும்
நிலையாமையின் இருப்பாகும்
அனைத்தையும் இழப்பது
அறிவுக்கு அழகாகும்
நிலையிடம் காணுவது
நீதர்கள் நிலையாகும்
இறவா னிலை அது
ஞாபகங்களின் நிறைவாகும்

பாரத மண்ணின் பெருமைமிகு மைந்தன்



சேற்றைக் கூட தின்னும் நாளும் சீக்கிரமே வந்திடுமோ
வாடி நின்ற என் வயி்ற்றின் வாட்டம் போக்க முடியலியே
சூதும் என்றும் வாதும் என்றும் ஏதேதோ சொல்லுவார்கள்
சொந்தம் யாரும் இல்லாததால் சொல்லின் அர்த்தம் புரியலே

சோறு எனக்குக் கிடைச்சாத்தான் வேறு பாஷை புரியுமே
சோறு என்ற ஒன்றுதான் சொர்க்கமாகும் இப்போது
தாயிருந்தால் அவளும் தவிக்கவிட மாட்டாளே
தாயைத் தேடி அலுத்துவிட்டு தவித்து வரும் நாளையில்

தாகம் தீர்க்கும் யாருமே தாயாய் எனக்கு ஆவாளே
என்னைப் போல எத்தனையோ ஏழைக் கூட்டம் வாடுது
எனக்கு இது புதுசுதான் இன்னும் கொஞ்சம் பழகணும்
பாதி உடம்பு பசியிலே பங்கப்பட்டு போனது

பெருமைமிகு பாரதத்தின் பாரம்பரியப் பெருமையில்
என்போல பால பரதேசிகளுக்கும் பலமான பங்கிருக்கு
பழம் பெருமை பேசுவதால் பலனொன்றும் இல்லையே
பக்குவமாய் எங்களுக்கும் பாதை ஒன்று காட்டுங்களேன்