Saturday, August 23, 2008

மடங்கள் மடத்தனத்தின் கூடாரங்கள்

ஆன்மீகம் என்ற போர்வையில் சாதி, மத, இன, மொழியை முன்னிறுத்தி நடத்தப்படும் அனைத்து மடங்களும் மடத்தனங்களின் கூடாரம்.

அன்பின் வழியது உயிர்நிலை அ திலார்
என்பு தோல் போர்த்திய உடம்பு

உலகில் இன்று நிலவும் கோரப்பிண்ணனிக்கு காரணம் எது என அறிய முயற்சித்தால் ஒவ்வொருக்குள்ளும் உள்ள ஒப்பற்ற தன் உயிர் நிலையை நேசித்து ஆராதிக்கும் பண்பைப் பெறாதாதுதான் என்பது என் கருத்து.

சரீர சிந்தனையின் உந்துதலால் அதன் சுகத்திற்கான பாட்டில் உயிர் நிலையை உணராமல் அதை அழித்துக் கொள்ளும் வாழ்வியல் சிந்தாந்தங்களை அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொண்டு விட்டோம். அனைவரும் சரீர சிந்தனையின் வசப்பட்டதால் உலகமே சுயநலக் கூட்டத்தின் கூடாரமாகி விட்டது. சரீர சிந்தனை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தால் கட்டப்பட்டது.

வினையறுத்தல் என்ற பொதுவான கருத்தை முன்னிறுத்திதான் அனைத்து மதப் பெரியோர்களும் தங்கள் கால தேச சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்கள் அறிவுரையை வழங்கி வந்துள்ளனர். ஆனால் இன்றைய மடங்கள் , அமைப்புக்கள், இயக்கங்கள் அறியாமையினால் பெரியோர்கள் வகுத்துவைத்த பாதைக்கு தங்களின் கீழான சுய நல அறிவு கொண்டு தவறான செயல்பாட்டு வினையால் இப்பூமியை இரத்தக் களறியாக்கி விட்டிருக்கின்றனர்.

முதலில் தன் தேகத்தை நேசிக்கும் அறிவை விடுத்து அதனுள் ஒளிரும் தன் உயிரை நேசிக்கும் அறிவைப் பெறும் பொழுது அன்பின் மற்றொரு நிலையாகிய அனைத்துயிரும் ஒன்றே என்ற சிந்தனை பூத்துக் குலுங்கும். இன்றைய மனித குலம் தன்னலத்தின் பாதையில் தன் உயிரையும் பிற உயிரையும் நேசிப்பதை வி்டுத்து தன் தேகத்தை மட்டும் நேசிக்கும் வழியினைப் பற்றியிருப்பதால்தான் உலகம் இன்று வன்மத்தின் பாதையை உகந்து கொண்டுள்ளது.

தேக சித்தாந்தம் மாயை. உயிரின் வழி உணரும்போது ஞானம் கைகூடுகிறது. தேகம் என்பது ஒரு குறுகிய வட்டம். ஆனால் தேகத்தில் பூத்துக் குலுங்கும் உயிர் நிலை பிரபஞ்ச சக்தியின் இதை மற்றொரு பரிணாம ரூபம்.

வினையறுத்தல் என்பது ஞானத்தின் முதற்படி. தேக சிந்தனை வசப்பட்டுச் செய்யும் எச்செயலும் வினைபுரிதலுக்கு வழிவகுக்குகிறது. உலக வினைகளின் பலன் பாவம் அல்லது மரணம். உயிர்வினை ஞானத்தின் திறவுகோல். அழியாநிலை. உயிர்வினை ஆற்றும் உபாயத்தைப் போதிக்க வந்தவர்கள்தான் மத கர்த்தர்கள். ஆனால் அவர்கள் அமைத்து வைத்த மத சிந்தனைகள் குரூர மனம் கொண்ட தேக சிந்தனையில் உள்ள அறியா மக்களால் இன்று கூறு போடப்பட்டிருப்பது வேதனையைத் தரும் ஒரு விஷயம்.

தேக சிந்தனை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலக் குறும்பால் பேதப்பட்டு வினைபுரியும். இதனை மாற்றும் உபாயம் அனைத்தும் அனைத்து வேதங்களிலும் பொதுவாக ஒத்து இருப்பது ஒரு ஆச்சரியமான ஒன்று. தன் உயிர்நிலை அறிந்தவர்கள்தான் அவதார மகிமையுடையவர்கள். அவர்கள் வினை இப்பூமியில் மக்களிடம் புதைந்துள்ள அறிவின் மகிமையையும், அதன் நீண்ட பரிமாணத்தையும் உணரவைப்பது என்ற ஒன்றைத்தவிர வேறெதையும் செய்யவில்லை.

புனிதர் இயேசு தங்கள் குறுகிய கால வாழ்வினுக்குள் அனைத்து மக்களிடமும் அன்பைப் போதித்த அற்புதங்களை நிகழ்த்தினார்.

முகம்மது ஸல் அவ்ர்கள் 40 ஆண்டுகாலம் அறியாமை நிறைந்த முரட்டு சுபாவம் உள்ள மக்களை குறிவைத்து வாழ்ந்த தியாக வாழ்வு அறிவின் உயர்நிலைக்கு எடுத்துக் காட்டு.

அதர்மத்தைக் களைய பகவான் கிருஷ்ணனின் அறிவு ஆச்சரியக் களஞ்சியம்.

இவ்வாறாக அறியாமையைக் களைவதையே தங்கள் வினைபுரிதலாகக் கொண்ட பெரியோர்கள் அவர்கள் எடுத்துக் கொண்ட பெருமுயற்சிகள் தியாக வரலாற்றின் அன்பின் அடையாளங்கள்.இருப்பினும் இந்த வழிகளைப் புறக்கணித்து அறியாமையை வளர்த்ததில் பெரும் பங்கு மதம் சார்ந்த மடங்களுக்கும், அமைப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் பொருந்தும்.

உதாரணமாக கடவுள் என்ற தத்துவப் பொருள் இருக்கும் இடம், அனைத்து மத வேதங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டிருந்தாலும் மதப் பிண்ணணி கொண்ட மடங்கள் இதற்கு மாற்றுக் கருத்தைத்தான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறது.

சைவமதம் ஈசன் இருப்பிடம் இருதயம் என்றும்

வைணவம் இருதய கமலவாசன் என்றும்

கிருத்துவம் புனித இருதயம் என்றும்

இஸ்லாம் கல்பென்ற இருதயத்தில் அல்லா உள்ளான் என்றும்
ஒத்த கருத்துக் கொண்டிருந்தாலும் வேதத்தில் பயிற்சியும் பாண்டித்யமும் பெற்ற இன்றைய ஆன்மீக சிந்தனாவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் நடத்தையாகிய பிற மத சகிப்புத்தன்மை இல்லாத ஒன்றினால் வெளிப்படுகிறது.

காரணம் இங்கே இருதயம் என்ற ஒரு சொல்லுக்கு பொருள் அறியா காரணத்தால் அறிவில் பேதமாகி அது தேகத்தில்முடிவடைகிறது. உயிர்நிலை என்ற உயர்ந்த ஞானம் வேதத்தை வார்த்தையாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு புரியாத அறியாமையால் இது நிகழ்கிறது. இருதய இடத்தை அறியும் வினையே மனிதகுலம் ஆற்றவேண்டிய பணியாகும்.

கடவுள் நிலையாகிய உயிர்நிலையை கல்லிலும் மண்ணிலும் தேடியதன் விளைவு மனித இனம் இன்று மிருக நிலையிலிருந்து சிறிதும் மாறாதிருக்கிறது. ஆனால் கீழ்நிலை மிருகங்கள் மனிதனைவிட தன் சுற்றம் சார்ந்து ஆனந்தமான வாழ்வு வாழ்கிறது.

ஆறாம் அறிவின் பயனை அறியாமல் தேகத்தைவிட்டு உயிர்நிலை வேறொரு அறிவு தேகத்தை நாடி தூல உடலைத் துறக்கிறது. இது வினையின் பயன். நம் வினைக்குள் மாட்டும் பாவச்செயலை போக்கவந்தவர்கள்தான் அவதார புருஷர்கள். அவர்கள் தங்களுக்கென்று எந்த மட அமைப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணமாக திருவள்ளுவ நாயனார் அவர்கள் கூறும் ஒரு செய்யுளைப் பாருங்கள்

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும்
காப்பான்வரம் என்னும் வைப்பிற்கு ஓர் வி்த்து

நம்முடைய ஐந்து புலன்களால் ஆற்றும் வினைகளால் ஏற்படும் விளைவுகளைக் கண்காணிக்க ஒரு ஆசான் துணை வேண்டும். அந்த ஆசான் அறிவுசால் பெரியோராக இருக்க வேண்டும். அவர் வழி செல்லும்போது தேக சிந்தனையில் இருக்கும் மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் புலன்கள் கர்மேந்தியங்கள் என்ற நிலை மாறி ஞானேந்திரியங்கள் என்ற பொறிகளாக மாறுகிறது. இதற்கு மங்காத வாய்மையென்னும் தவச் செல்லம் வேண்டும் என்று ஒவ்வொரு குறளிலும் தன் தெய்வக் கொரலை வைத்து திருவள்ளுவ நாயனார் வழியிட்டுச் சென்றுள்ளார்.

புலன்வழிப் பற்றியோடிப் போக்கியயென்
வயதையெல்லாம் நலன்தர மீட்டித்
தந்தென் நாளினை அடியேன் மீண்டும்
புலன்வழி யழித்திடாது
புண்ணியம் தனக்கே யீட்டென்றலர்ந்த
வாய்த் திகிரி வேந்தே அதிசியம் ஆஈ தென்னே

புலன்வழிப் பற்றியோடி அழித்துக் கொண்ட வயதை நமக்கு மீட்டுத் தரும் வினைத் தொழிலைச் செய்யவந்தவர்களே மேலோர். அன்பின் பாதையை அனைவரும் அறிய வேண்டுமெனில் அனைவரும் தன் தேக சிந்தனைப் பாடுகளைத் தூக்கியெறிந்து உலகெங்கும் விளங்கும் உயிர்நிலையை தன்னுள்ளில் தேடும் வினைபுரியவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்பது இதைத்தான். இதற்கான பாட்டிற்கு நாம் பெறும் கூலி உலக அன்பு, பிரபஞ்ச ஆனந்தம், நேசக் கட்டுடலால் இணைக்கப்பட்ட உறவு அமைப்புகள். இதுவே ராம ராஜ்யம். தேஜோமயம். பிரம்மானந்தம் போன்ற அனைத்தும்

இதைக் காணும் மக்களுக்கு ஒரு செய்தி. இது நாள் வரை நீங்கள் திருக்குரலை பல பரிமாணங்களில் கண்டும் கேட்டும் படித்தும் இன்புற்றிருப்பீர்கள். இன்றிலிருந்து ஒவ்வொரு குரளையும் அதன் செய்தியை உலக விஷயங்களுக்கோ அல்லது வாழ்வியலுக்கோ கூறுவதாகப் பொருள் கொள்ளாமல் அதாவது நமது தேகத்தைச் சார்ந்த செய்தியாகக் கருதாமல் நுண்ணிய அறிவோடு படித்துப் பாருங்கள். பெரிய பெரிய ஆன்மீகப் பொக்கிஷங்களை உள்ளடக்கியிருப்பதை அறியமுடியும்.

இந்தக் குறளைப் பாருங்கள்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன்
நல்வினைமேற்சென்று செய்யப்படும்

இங்கே நல்வினை என்பதை உலக மக்களுக்கு செய்யும் உதவிகள் அல்லது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவிக்கான காரியங்கள் என்ற சிந்தனைவிடுத்து அவர் கூறும் மேற்சென்று செய்யப்படும் என்ற வினை எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள். அதாவது ஒரு மூச்சு உள்ளே இழுக்கும்போது நாம் செல்வம் படைத்தவனாகின்றோம். அதே ஒரு மூச்சினை வெளியே விடும்போது ஏழையாகிறோம் என்ற ஒரு தகவலை முன்னிறுத்திப் பாருங்கள். கல்வியின் பயன் என்ன வென்று அறியலாம்

ஈதல் இசைபட வாழ்தல் அஃது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

என்பதில் நாம் சம்பாதிக்க வேண்டிய ஊதியம் என்ன வென்று அறியலாம்

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்
வையத்து அலகையா வைக்கப்படும்

இங்கே அலகை என்ற சொல் ஊதியம் என்ற பயனுக்கு எதிரான பலன் என்பது அறியலாம். ஜலத்தினில் அக்கினி உருவாய் இருப்பது உயிர் அது ஜடத்தினுக்கு இறங்கும்போது தேகமாகிறது. தேகத்தை துறக்கும்போது ஆசாபாசங்கள் ஓய்கிறது. அனைத்துயிரும் ஒன்றென அறியும் பேரறிவு உதயமாகிறது. தேக அறிவில் இறங்கும் போது வியாதிகள் பீடிக்கிறது. தேவஅறிவு உயிரை வாழவைக்கிறது. இந்த ஒப்பற்ற உண்மைகளை மடங்கள் அறியவில்லை. அறிந்து கொள்ள முயலவும் இல்லை. தீவிரவாதமும், கேடும் பிடியாய்க் கொண்டு தன் மதத்திற்கே விரோதமான காரியங்களைத்தான் எல்லா மடங்களும் இன்று பற்றிக் கொண்டு உள்ளது.உயிர்நிலையை அறிய மறுக்கும் அறியாமையைக் களைந்து ஆற்ற வேண்டிய வினை எது என்பதை உணர்த்தும் ஒரு பாடலைக் காண்போம்.

உள்ளது நூறே யாண்டி லிளமையி
லீராறு போகும் மெள்ளவே
முதுமை தன்னில் மூன்றுபத்தாகும் மைந்தா
கள்ளமா முறக்கந் தன்னில்
கணக்கிருபத்தாறு போக
விள்ளுவா யிருபத்தாறே
மீந்ததிலுரைக்கக் கேண்மோ

மீந்ததோர் வயதிருபத் தாறுக்கும்
பங்குக்காரர்
காய்ந்திடும் வறுமை நோயும்
கல்வியு மின்ப மின்னோர்க்கீந்திடில்
மீதமெங்கே இவர்கட்கே போதா தாகும்
மீந்துனக் கெவரீ வார்காண்
மோட்சமுன் பேச்சே வீணாம்

வீணதுவாகிடாமல் மேலவ ரிடத்தில்
சார்ந்தாலூண்சுவை யிருதயத்துள்
ளுறைந்த நன்னிலமும் காட்டிப்
போனனாள் மீண்டங்கேறும்
பேரின்ப வடிவம் பெற்று
ஊனங்க ளனைத்தும் தேய்ந்து
உன்புகழ் வானம் பாயும்

இந்த வினையை எந்த மடங்கள் முன்னிறுத்துகிறதோ அன்றே அன்பிற்கான பாதை செம்மைப்படுத்தவிட்டது என்று பொருள்

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பணி யெவர்க்கும் ஆற்றி
மனத்துள்ளே பேதா பேதம்
வஞ்சம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறென்றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும்தானே

பஞ்சமா பாதங்கள் அல்லது அதன் வினைப்பயனை மட்டும் செய்யும் நம் உடலில் உள்ள கர்மேந்திரியங்களை பஞ்சாட்சரப் பொருளை அறியும் ஞானேந்திரியமாகக் கொள்ளும் போதுதான் உலகம் அன்பின் பூங்காவாகும். அந்த நாளை பூமிக்கு இறக்க இன்னொரு இயேசுவோ அல்லது கிருஷ்ணரோ வர அனைவரும் இறைவனை இறைஞ்சுவோம்.

எனவே கருத்துக்களே கடவுள். கடவுளைக் கல்லிலும் மண்ணிலும் தேடாதிருப்போம்.