வாழ்வியலில் செம்மையான வாழ்க்கை முறைக்கு வள்ளுவம் கூறாத வழிமுறைகளே இல்லை எனலாம்.
அறம் பொருள் இன்பம் பேசிய திருவள்ளுவ நாயனார் முப்பாலின் பயன் வீடு பேறே என்பதை படிப்பவர்களே அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு தனியாக பாடல்கள் ஏதும் எழுதாது நம் கருத்துக்கே விட்டுவிட்டது தெய்வப் புலவரின் அதீத கொரல் (ஆம் குறள் அல்ல - வள்ளுவ நாயனாரின் தெய்வீகக் குரல்தான் 1330 பாடல்களும்).
சிறந்த கட்டமைப்பைக் கொண்ட திருக்குறளின் 1330 பாடல்களும் பரிபாஷை என்னும் சங்கேத மொழியால் சமையப் பட்டது. எந்தப் பரிமாணத்தில் பார்த்தாலும் அதற்கு ஒரு பதில் வைத்திருக்கும் ஒப்பற்ற நூல் என்பதை யாவரும் அறிவோம்.
புணர்ச்சி என்ற என்ற சொல்லின் அடிப்படையான ஒழுக்க நெறிகள் பற்றி வள்ளுவம் என்ன சொல்கிறது என்பதை ஒரு பாடல் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறேன்
அதாவது
ஒழுக்கம் விழுப்பம் தரலாம்
ஒழுக்கம்உயிரினும் ஓம்பப்படும்.
விழுப்பம் என்றால் தீட்டு.
ஒழுக்கம் எவ்வாறு தீட்டடையும்.
ஏதோ முரண்பட்ட கருத்தைக் கூறுவது போல இருக்கிறதே.
இங்கேதான் வள்ளுவம் பரிபாஷைத் தத்துவத்தை உணர்த்தி இந்தப் பாடலைத் தந்துள்ளது.
ஒழுக்கம் என்பது உயிரினால் ஓம்பப் படும் அதாவது ஆராதிக்கப்படும் அல்லது கையகப்படுத்தப் படும் அல்லது கடைப்பிடிக்கப்படும் ஒரு வஸ்து. நாம் கொண்டுள்ளது போல் ஒழுக்கம் என்பது ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறை மட்டும்தான் என்ற அர்த்தம் மட்டுமல்ல.
புணர்ச்சி என்பது வெறும் இனப்பெருக்கத்திற்கான செயலா, அப்படி இல்லை என்றால் என்றும் புணர்ந்துகொண்டே இருக்கலாமா ? அப்படி எப்பவும் புணர்வது என்பது சாத்தியமா ? இதில் எப்பவும் புணர்ந்து கொண்டே இருந்தால் கல்வி வீடு பயனை அடையலாம் என்று வள்ளுவம் கூறுகிறது.
வெறும் உடல்ப் புணர்ச்சி என்ற செயல் மிருகத்தின் இயல்பு. இது அதைத்தாண்டி ஒரு பெரும் பொருளைப் புணரும் உயரிய நிலை.
இதை விரிவாகப் பார்ப்போம்
மனிதனின் புணர்ச்சி என்ற உந்து செயலுக்கு உடற் தீ தான் முதல் ஊக்கி என்பதை நாம் யாவரும் அறிவோம். காமாக்னியின் தூண்டுதலால் உடலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க புணர்ச்சி எனும் வடிகாலால் நிவர்த்தித்துக் கொள்வது உயிரினங்களுக்கு விதிக்கப்பட்ட விதி.
இனப்பெருக்கத்திற்கு மூலமான ஒரு செயலை விரசமாக்கியதில் மனித குலம்தான் முதன்மை வகிக்கிறது. மிருகங்கள் இயல்பாய் அடங்கி/அடக்கிக் கொள்ளும் ஒரு காரியத்தில் மனிதன் மிருகமாய் இயல்பு மீறி இருப்பது புணர்தல் என்னும் ஒரு செய்கையால்தான் என்றால் மிகையல்ல.
இதை வள்ளுவப் பெருந்தகை எவ்வாறு விளக்குகிறார் என்றால் ஒழுக்கம் என்ற உயர்குணம் ஒரு காலகட்டத்தில் விழுப்பம் தரலாம் அதாவது தீட்டாகிப் போகக் கூடும் அபாயம் கொண்டது. ஒருவன் உலக ஒழுக்கத்தில் முதன்மையாய் இருந்து புணர்தல் என்ற ஒன்றைப் பற்றி சிந்திக்காதிருந்து பத்தியம் காத்தாலும் விழுப்பம் என்னும் தீட்டுககு உரியவனாகத்தான் இருக்கிறான் மனிதன்.
உயிரை உற்பவிக்கும் மூலமான நாத விந்தானது பத்தியத்தோடு இருப்பவருக்கும் கட்டுப்பாடின்றி கசிந்து விடும் இயல்பு கொண்டது. எனவே அதை வலுக்கட்டாயமாக அடக்கி நிறுத்த முயலவேண்டாம் என்பதையே பெரியோர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் தறி கெட்ட உடற்புணர்ச்சி எமனின் வீட்டிற்கான பாதையின் முதற்படி.
ஆனால் ஒழுகும் தன்மையுள்ள நாத விந்துவை ஒழுகாமல் ஆக்கி தீட்டுத் தொடராத சுத்தத்தில் ஒருவன் ஆகிக் கொள்ள வேண்டுமானால் நன்மையான நெறிமுறைகளையே ஒழுகி வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டாலே சாத்தியப்படுகிறது.
எனவே ஒழுக்கம் என்பது என்னவென்றால் ஒழுகும் ஒரு பொருளை ஒழுகாமல் ஆக்குவதற்கு உதவும் தெய்வீக நெறிகளைக் கைக் கொள்வதே ஒழுக்கம் என்ற உயர்பண்பு ஆகும். அதாவது அவ உராய்வான புணர்ச்சியைப் புறக்கணித்து, அக உராய்வில் இறைவனைப் புணர்ந்து, புறத்தைப் பற்றிய சிந்தனைகளை நிராகரித்து அகத்தை கைக் கொள்ளும் உபாயம் அறிந்தோருக்கே திரவ நிலையிலுள்ள ஒழுகும் தன்மையுள்ள ஒரு வஸ்து திட நிலையான மணியாக உருமாறி கீழே ஒழுகாமல் மேலேறி குண்டலினி என்ற ஏகாந்த மணியாக மாறி பரலோகம், கைலாயம், வைகுண்டம், மெகராஜ் என்ற சொர்க்க புரிக்கு அழைத்துச் செல்லும்.
இது விந்தடக்கம் என்ற புணர்ச்சியை வகைப்படுத்திக் கொண்டோருக்கே கைபலிதமாகும். இது ஒரு பிரம்ம வித்தைச் செயல். இது சாமானியர்களால் கைபோடமுடியாது. உலக வாழ்க்கையிலும் உழன்று கொண்டு மெய்வீடடையும் தியான வழிகளிலும் சிறிது நேரம் செலவிட்டால் போதுமென்று இருந்து விட்டால் வீடு பதம் என்பது வாய்க்காது.
எனவே ஒரு அருட்குருபிரானின் உதவியோடு என்றும் புணர்ந்திருக்கும் செயல் ஒருவனுக்கு வாய்க்குமேயானால் இந்த இல்லறப் புணர்வு அதன் அணுவின் மயிரிழை அளவிற்குக் கூட ஒப்பாகாது. அப்படிப் பட்ட மேலான இன்பத்தைத் தருவது அந்தப் புணர்ச்சி. அந்தப் புணர்ச்சியில் விந்து நாதம் சிதறாது மணியாக உருமாறி என்றும் பேரானந்தப் பெரு வெளியாம் துவாத சாந்தம் என்னும் இறைவனுடைய மைதான வீதியில் ஆனந்த எக்களிப்போடு என்றும் இளமையாய் நரை திரை மூப்பு என்ற இல்லறத் தடைகளைத் தாண்டி இன்பமயமாய் திளைத்து இருக்கும்.
இப்படிப்பட்ட தீட்டு வெளியாகாத சுத்தத் திருமேனிக்கே சைவத்திருமேனி என்று பெயர்.
சைவம் என்றால் பரிசுத்தம். அதே போல் இஸ்லாம் என்றாலும் பரிசுத்தம்.
எல்லா மதங்களும் போதிப்பது ஓழுகும் தன்மையான அசுத்தத்தை ஒழுகாத தன்மையுடைய பரிசுத்த ஒழுக்கமாக மாற்றிக்கொள்ளும் மார்க்கத்தை கடைப்பிடிப்பதுதான், இதை எப்பொழுதும் புணர்ந்து கொண்டே இருப்பதுதான் மனிதனின் நித்திய கடமை. மற்ற குடும்ப பராமரிப்பு அதற்காக பணம் ஈட்டுவது போன்றவை ஏனைய மிருக வாழ்க்கைக்கு ஒப்பானதுதான். அதற்காக மட்டும் நமக்கு ஆறாம் அறிவு தரப்படவில்லை.
இந்த புணர்ச்சியினால் விளைவது ஏழாம் பிறப்பென்னும் தேவப்பிறப்பு, அசுத்த பிண்ட உருவத்திலிருந்து சுத்த சைவத்திருமேனியாகப் பிறப்பது. அது தன்னகத்துள்ளேதான். சொர்க்கம் என்பது நரகம் என்பது நம் உடம்பில்தான் அமைக்கப்பட்டுள்ளது. எங்கோ ஆகாயத்தில் இல்லை. இதை அறிந்து பயணப்பட்டால் என்றும் புணரும் ஒரு அதி மகோன்னதப் புணர்ச்சியின் உச்சம் அனைவராலும் அறியப்படலாம்.
அது எக்காலமோ? யாருக்கோ?
Sunday, March 2, 2008
வள்ளுவம் கூறும் ஒழுக்கம்
Posted by SALAI JAYARAMAN at 4:54 AM
Labels: திருக்குறள், வள்ளுவம் 0 COMMENTS
Subscribe to:
Posts (Atom)